பெய்ஜிங் :
மெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன துணை தூதகரத்தை 72 மணி நேர அவகாசத்தில் மூட அமெரிக்கா செவ்வாயன்று உத்தரவிட்டது, இந்த கெடு இன்றுடன் முடியும் நிலையில்.
சீன தூதரக அதிகாரிகளோ என்ன நடக்கும் என்பதை நாளை பார்ததுக்கொள்ளலாம் என்று நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சீன ராணுவத்துடன் தொடர்புடைய பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர் அமெரிக்காவில் உளவு பார்த்ததாகவும் அவர் கடந்த சில வாரங்களாக சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள சீன துணை தூதரகத்தில் மறைந்திருந்ததாகவும் கூறி அந்த நபரை இன்று அமெரிக்கா கைது செய்திருக்கிறது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், செங்டு நகரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட சீனா 72 மணி நேர அவகாசம் அளித்துள்ளது என்று சீன செய்தி நிறுவனம் கூறியுள்ளது. செங்டு நகரில் உள்ள இந்த துணைத் தூதரகம் திபெத் அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹாங்காங்-கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடுவதற்கு சீனா தயாராகி வருகிறது என்று செய்திகள் வெளியான நிலையில், திபெத் விவகாரங்களை கவனித்துவரும் செங்டு நகரில் உள்ள துணைத் தூதரகத்தை மூட உத்தரவிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
சீனாவின் இந்த பதில் நடவடிக்கை அமெரிக்கா சீனா இடையிலான மோதல் முற்றிவருவதையே காட்டுகிறது.