பீஜிங்
சீனாவின் தலைநகர் பீஜிங் கில் கனமழை காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டு இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் தென் பகுதி டோக்சுரி சூறாவளி காரணமாகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பீஜிங்கிலும், ஹெபெய், தியான்ஜின் மற்றும் கிழக்கு ஷான்சியிலும் இடைவிடாமல் பெய்த மழையால் அனைத்து இடங்களிலும் நீர் தேங்கியுள்ளது.
சீனாவின் முக்கிய ஆறுகளில் தண்ணீர் அபாய அளவை விட தாண்டி ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பீஜிங் துணை மேயர் சியா லின்மாவோ செய்தியாளர்களிடம்,
”வெள்ளத்தில் சிக்கி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 18 பேர் மாயமாகி உள்ளனர். மேற்கில் தொடர்ந்து பெய்த கனமழைக்கு 59 ஆயிரம் வீடுகள் சரிந்து விழுந்துள்ளன.
மொத்தம் கிட்டத்தட்ட 1,50,000 பேரின் வீடுகள் சேதமடைந்துள்ளன. முப்பத்து ஏழு ஆயிரம் ஏக்கர் பயிர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட பாலங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இந்த சேதத்தின் அளவைக் கருத்தில் கொண்டு, முழு மீட்டெடுப்புக்கு சுமார் 3 ஆண்டுகள் வரை ஆகலாம்.”
என்று கூறி உள்ளார்.