பீஜிங், சீனாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இருந்தாலும் தடுப்பூசி செலுத்தும் பணியையையும் தீவிரமாக்கி வருகிறது. இதுவரை மொத்தமுள்ள மக்கள் தொகையில் 75.8% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.
உலக நாடுகளுக்கு கொரோனா என்னும் பெருந்தொற்றை பரப்பிய சீனாவில், தற்போது மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. டெல்லி வைரசின் பிறழ் வைரஸ் ஏ.ஒய்.4.2 என அழைக்கப்படும் உருமாறிய கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. தற்போதைய நிலையில், கொரோனா தொற்று பாதிப்பில், முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் தொடர்ந்து வருகின்றன. சீனாவின் உண்மையான தகவல்கள் வெளிநாடுகளுக்கு தெரிவிக்கப்படாத நிலையில்,அங்கு மீண்டும் லாக்டவுன் போடப்பட்டு இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றனர்.
தற்போது சீனாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97,080 (நேற்று 96,938) ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 636 ஆக உள்ளது. 91,681 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சீன மக்கள் தொகையில் 75.8% பேருக்கு முழுமையான COVID-19 தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
அக்டோபர் 29 ஆம் தேதி (நேற்று) வரை சீனாவில் மொத்தம் 2.26 பில்லியன் தடுப்பூசி டோஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்று அந்நாடு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 1.07 பில்லியன் மக்களுக்கு முழுமையான 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும், இது சீனாவின் 1.41 பில்லியன் மக்களில் சுமார் 75.8 சதவீததம் என்றும் அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் மி ஃபெங் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார்.