டில்லி
பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது தலைவர் மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க சீனா நான்காம் முறையாக ஒப்புதல் அளிக்கவில்லை.
பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் தொடர்ந்து இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்தி வருகிறது. இந்தியாவில் சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கும் இந்த இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் பாகிஸ்தானில் அடைக்கலமாக உள்ளான். அவன் உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சையில் உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா ஏற்கனவே மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்து அந்த பட்டியலில் சேர்க்க ஐநா பாதுகாப்புக் குழுவுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
அந்த கோரிக்கைக்கு ஏற்கனவே மூன்று முறை சீனா தடை விதித்த காரணத்தினால் அந்த கோரிக்கை ஐநா பாதுகாப்பு குழுவினரால் நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பல உலக நாடுகளின் ஆதரவுடன் மீண்டும் அந்த கோரிக்கையை இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன் வைத்தன.
தற்போது நான்காம் முறையாக சீனா ஒப்புதல் அளிக்காததால் மீண்டும் இந்த கோரிக்கை தோல்வி அடைந்துள்ளது. இந்த தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அத்துடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு அளித்த நாடுகளுக்கு நன்றியை தெரிவித்துள்ளது.