டெல்லி: சீனாவில் பரவி வரும் ஒமிக்ரான் மாறுபாடு  வைரசால் இந்தியா உள்பட பிற நாடுகள் பீதியடைய வேண்டாம் என கொரோனா அனலிஸ்ட் விஜயானந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சீனாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டு, உலகையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கிப் போட்டிருந்த கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மீண்டும் குறிவைத்துள்ளது. அடுத்த 4 மாதங்களுக்குள் 3 கொரோனா அலைகள் சீனாவைத் தாக்கக் கூடும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை அச்சம் தெரிவித்துள்ளது.

சீனாவில், ஜீரோ கோவிட் பாலிசி தளர்த்திக் கொள்ளப்பட்டதுமே கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அங்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒரே நாளில் 2,097 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது ஒப்பீட்டளவில் குறைவானதாக தெரிந்தாலும், சீனாவில் கடந்த ஏப்ரல் மாத உச்சத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம்தான். கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, கொரோனா பரிசோதனைகள் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டதை சுட்டிக்காட்டும்  நிபுணர்கள், உண்மையில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணரும், உலக சுகாதார அமைப்பின் கொரோனா மருத்துவ நிபுணர் குழு உறுப்பினருமான எரிக் ஃபைகல்-டிங்கின் கணிப்பின்படி,   “அடுத்த 90 நாட்களில் சீன மக்கள் தொகையில் 60 சதவீதம் அதாவது உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகக் கூடும், இதனால் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கக் கூடும்”என்று எச்சரித்துள்ளார். வேகமாக அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளை சமாளிக்க முடியாமல் சீனா திணறுவதாகவும்,  “இது தொடக்கம்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, அமெரிக்கா உள்பட பல நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் பல நாடுகள் மீண்டும் பீதியடைந்து வருகின்றன. இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்தியஅரசு முடுக்கி விட்டுள்ளது.

இந்த நிலையில், பிரபல கோவிட் அனலிஸ்டான, விஜயானந்த், இந்தியா உள்பட எந்தவொரு நாடும் பீதியடைய தேவையில்லை என்ற நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.  சைனாவில் நெருக்கடியை ஏற்படுத்தி வருவது ஒமிக்ரான் மாறுபாடுகள் என்று  சுட்டிக்காட்டியுள்ளதுடன்,   கோவிட்  தற்போதைய மாறுபாடுகள் ஓமிக்ரான் சப்லைனேஜ்கள் BA.2.75, BA.5, BQ.1, XBB ஆகியவை மட்டுமே. இந்த வைரஸ்தான் தற்போது   உலகின் பிற நாடுகளில் காணப்படுகின்றன. எனவே சீனாவின் இந்த நெருக்கடி இந்தியாவிலோ அல்லது உலகின் பிற பகுதிகளிலோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எனவே கவலை அல்லது பீதிக்கு எந்த காரணமும் இல்லை என கூறியுள்ளார்.