கௌகாத்தி

சீனா வானிலை மாற்று முறை மூலம் இந்தியாவுக்கு வரவேண்டிய மழையை திபெத் பகுதிக்கு மாற்றுவதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு வருடம் வெள்ளத்தினால் பேரழிவு ஏற்படுவது வழக்கம்.   இதனால் அசாம் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.   தற்போது அசாம் மாநில நிதி அமைச்சர்  ஹிமந்தா பிஸ்வா சீனாவின் தலையீட்டால் அசாம் மற்றும் அருணாசலப் பிரதேச மாநில மக்கள் துயரடைவதாக தெரிவித்துள்ளார்.

ஹிமந்தா பிஸ்வா, “அசாம் மாநிலத்தில் வருடா வருடம் கனமழை காரணமாக வெள்ளம் வருவது வழக்கமான ஒன்றாகும்.   ஆனால் சென்ற வருடம் கடும் மழை பெய்யவில்லை.  அப்படி இருந்தும் அசாம் மாநிலம் கடும் வெள்ளத்தால் துன்புற்றது.  இதற்கு சீனா தான் காரணம் என அதிரிச்சியூட்டும் தகவல்கள் வருகின்றன.

வானிலை மாற்று முறை மூலம் இந்தியாவின் மேலுள்ள மேகங்களை சீனப் பகுதியான திபெத்துக்கு சீனா திருப்பி விடுகிறது.  அதனால் திபெத் பகுதிகளில் கடும் மழை ஏற்படுகிறது.   தங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்ததும் மீதமுள்ள தண்ணீரை இந்தியாவுக்கு சினா திறந்து விடுகிறது.

அதனால் அசாம் மாநிலத்திலும் அருணாசலப் பிரதேசத்திலும் சென்ற வருடம் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.    இது குறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், “பிரம்ம புத்திரா மற்றும் சட்லெஜ் நதிகளில் கடந்த வருடம் எவ்வளவு நீர் வரத்து இருந்தது என்பதையும் எவ்வளவு உபரி நீர் திறந்து விடப்பட்டது என்பது குறித்தும் சீன அரசு தெரிவிக்கவில்லை.   இரு நாடுகளுக்கும் இடையே நதி நீர் ஒப்பந்தம் இருந்தும் இதுபோல தகவல்களை சீன அரசு தருவதில்லை”  என தெரிவித்துள்ளது.

சீன அரசு வருடா வருடம் இந்த தகவல்களை இந்தியாவுக்கு அளித்து வந்ததாகவும் கடந்த வருடம் நடந்த தோக்லாம் ராணுவ நடவடிக்கைகளால் எந்த விவரமும் சீனாவும் அளிக்கவில்லை எனவும் இந்தியாவும் அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.