சாங்கிங், சீனா
சீன நாட்டில் உள்ள மணமாகாத இளைஞர்களுக்கு மனைவியைத் தேட வசதியாகக் காதல் ரெயில் திட்டத்தை அரசு அ/றிமுகம் செய்துள்ளது.
சீன நாட்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் சுமார் 20 கோடி இளைஞர்கள் மணமாகாமல் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இவர்கள் தங்கள் துணையை வெகு காலமாக தேடியும் கிடைக்காமல் உள்ளனர். அரசு இந்த இளைஞர்களுக்கு ஏற்ற துணையைத் தேடிக் கொள்ள உதவ முன் வந்தது. இந்த உதவிக்குச் சீன அரசுடன் சீனாவில் உள்ள கம்யூனிச இளைஞர் கழகமும் இணைய முன் வந்தது.
இதை அடுத்து 1000 இளைஞர்களும் 1000 இளைஞிகளும் செல்லும் காதல் ரெயில் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ரெயில் சீனாவின் சாம்கிங் பகுதியில் இருந்து கிளம்பி ஆமூர் வரை செல்கிறது. ஒரு இரவு முழுவதும் பயணிக்கும் இந்த ரெயிலில் செல்லும் ஆண்கள் உடன் வரும் பெண்களுடன் பேசி அறிமுகம் செய்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர்களுக்கு புரிதல் ஏற்பட்டு காதல் உண்டாகும் எனவும் அரசு எதிர்பார்த்துள்ளது.
இந்த ரெயில் ஆண்டுக்கு மூன்று முறை இயங்கப்பட உள்ளது. இந்த ரெயிலின் பெயர் ஒய்9999 என இருந்தாலும் மற்றொரு பெயரான LOVE PURSUIT TRAIN என்னும் பெயரே புகழ் பெற்றுள்ளது. இதற்குத் தமிழில் காதல் கொள்ளும் ரெயில் என பொருளாகும். இந்த ரெயிலில் இரு பாலரும் பழக வசதியாகப் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதுவரை இந்த ரெயிலில் பயணம் செய்துள்ள 3000 ஜோடிகளில் 10 ஜோடிகள் திருமணம் செய்துக் கொண்டுள்ளன.
இது குறித்துப் பெயர் தெரிவிக்க விரும்பாத சமூக ஆர்வலரான ஒரு இளைஞர் சீனாவை விட அதிக அளவில் இந்தியாவில் முரட்டு சிங்கிள்கள் உள்ளனர். அவர்கள் பெண்களுடன் மிங்கிள் ஆக நமது அரசுகள் ஒன்றும் செய்வதிலை” என வருத்தத்தை தெரிவித்துள்ளார்.