சென்னை: மதுரையில் குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்ட இதயம் அறக்கட்டளை காப்பகம், முறையான அனுமதி பெறாமல் நடைபெற்று வந்ததும், சிறந்த சேவைக்காக கடந்த அதிமுக ஆட்சியில் 2முறை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தமிழகஅரசின் விருது பெற்றதும் அம்பலமாகி உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் இயங்கி வந்த இதயம் அறக்கட்டளை காப்பகத்தில் ஆதரவற்ற பெண்கள் தங்கியிருந்தனர். இந்த காப்பகத்தில் பல்வேறு முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த காப்பகத்தில், தங்கியிருந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணின் ஒரு வயது ஆண் குழந்தையும், ஸ்ரீதேவி என்ற பெண்ணின் 2 வயது பெண் குழந்தையும் சமீபத்தில் கொரோனாவால் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக அந்த குழந்தைகளின் தாய்மார்களிடம் நிர்வாகத்தின் கூறிவிட்டு, குழந்தைகளை அடக்ம் செய்வதாக கூறி, அதை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, போலி ஆவணங்களை தயாரித்து பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில், காவல்துறை நடவடிக்கை எடுத்து இதயம் அறக்கட்டளை நிர்வாகி கலைவாணியை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியது.
இதில், குழந்தைகள் இறந்துவிட்டதாக நாடகமாடி, அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்து. இதையடுத்து குழந்தையை வாங்கிய நபர்களிடம் இருந்து குழந்தைகள் மீட்கப்பட்டதுடன், இதயம் அறக்கட்டளைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் விசாரணையில், அறக்கட்டறை ஒருங்கிணைப்பாளர் கலைவாணி கைது செய்யப்பட்டார். மேலும், குழந்தைகளை விற்க இடைத்தரகர்களாக செயல்பட்ட செல்வி மற்றும் ராஜா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி குழந்தைகளை வாங்கிய இரு தம்பதியினரும் கைது செய்யப்பட்டனர். இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதயம் அறக்கட்டளை நிர்வாகியான சிவக்குமாரும், நிர்வாகி மதார்ஷாவும் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
10ஆண்டுகளக செயல்பட்டு வரும் இதயம் அறக்கட்டளை அதிமுக ஆட்சியில் 2முறை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சிறந்த சேவைக்கான விருதையும் பெற்றுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறக்கட்டளைக்கு விருது வழங்க சிபாரி செய்தது யார், எதன் அடிப்படையில் விருது வழங்கப்பட்டு என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த காப்பகத்தில் வேறு ஏதேனும் குழந்தைகள் விற்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், காப்பகத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கணினியின் ஹார்ட் டிஸ்க்கை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, அறக்கட்டளை மற்றும் சிவக்குமாரின் தனிப்பட்ட வங்கி கணக்குகள், அறக்கட்டளையின் கீழ் உள்ள வங்கி கணக்குகளை முடக்கப்பட்டுள்ளன.