போபால்

முன்னாள் மத்தியப் பிரதேச அமைச்சரும் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான கோபால் பார்கவ் முட்டை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் பல குழந்தைகளுக்கான சத்துணவு மையங்கள் இயங்கி வருகின்றன.   இந்த மையங்களில் குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்படுகிறது.  ஆனால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் முன்பு ஆட்சி புரிந்த பாஜக அரசு முட்டை வழங்காமல் இருந்தது.  அப்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இதை கடுமையாக எதிர்த்து வந்தார். அத்துடன் முட்டைக்கு மாற்றாக வேறு பல உணவுகள் உள்ளதாகவும் கூறி வந்தார்.

தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.  இந்த ஆட்சியில் சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு முட்டை வழங்கத் தொடங்கப்பட்டுள்ளது.  இதற்கு பாஜகவின் முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான கோபால் பார்கவ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

கோபால் பார்கவ் செய்தியாளர்களிடம், “ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள அரசிடம் இருந்து சத்தான எண்ணங்களை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?  இன்று குழந்தைகளுக்கு முட்டையை அளிக்கும் அரசு பிறகு கோழி மற்றும் ஆடுகளை வழங்கும்.  குழந்தையில் இருந்து முட்டையைச் சாப்பிட வைத்தால் அவர்கள் வளர்ந்ததும் மனிதர்களையே உண்ணத் தொடங்குவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சு மாநிலம் எங்கும் கடும் சர்ச்சையை உண்டாக்கி  இருக்கிறது.   பலர் கோபால் பார்கவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ஷோபா ஓஜா. “பாஜக ஆளும் பல மாநிலங்களில் சத்துணவு மையங்களில் முட்டை வழங்கப்படுகிறது.  அங்குள்ள குழந்தைகளும் மனிதர்களை உண்பவர்களாக  மாறுவார்களா?   இவ்வாறு பேசும் கோபால்  பார்க்கவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.