சென்னை: தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் 56% அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரபல பத்திரிகையான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் , ஆர்டிஐ  மூலம் எழுப்பிய கேள்விக்கு  தமிழ்நாடு அரசு அளித்துள்ள பதிலில் இந்த விவகாரம் வெளியாகி உள்ளது. அதே வேளையில், குழந்தை திருமணம் குறித்து  புகார் கூறியும், அதை தடுக்காமல் அதிகாரிகள் மெத்தமான செயல்பட்டு வந்ததும்  தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சியை அதிகரித்து இருப்பதாக  மார்தட்டி வரும்  திமுக அரசுக்கு இந்த தகவல் பெரும் இழிவை ஏற்படுத்தி உள்ளது. காலை உணவு திட்டத்தால் குழந்தைகளியே கல்வி வளர்ச்சி அதிகரித்துள்ளதாக கூறி பெருமைப்படும் தமிழ்நாடு அரசு, அதே வேளையில் அதிகரித்து வரும் குழந்தை திருமணத்தை தடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்பது அம்பலமாகி உள்ளது.

சமத்துவம், சமதர்மம் என்று கூறி மக்களிடையே வேறுபாட்டை உருவாக்கி வரும்  ஆட்சியாளர்கள், இளம்பெண் குழந்தைகளை பாழாக்கும் குழந்தைகள் திருமணத்தை தடுக்க தவறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை இந்தாண்டில் மட்டும் 55.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு 1,054 குழந்தை திருமணங் கள் நடந்த நிலையில், இந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1,640 திருமணங்கள் நடைபெற்றிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ கண்டறிந்துள்ளது.

குழந்தை திருமணம் குறித்து தகவல் கிடைத்து அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தும் சதவிகிதமும் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்துள்ளது.

2022ஆம் ஆண்டில் 3,609 புகார்கள் கிடைத்த நிலையில், 70.2 சதவிகித திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ஆனால், 2023இல் 3,049 புகார்கள் பெற்று 65.4 சதவிகிதமும் 2024இல் 3,544 புகார்கள் பெற்று 53.7 சதவிகிதமும் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. புகார்கள் பெறுவதில் தாமதம் காரணமாக தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டு அதிகபட்சமாக 150 குழந்தை திருமணங்களும், நெல்லை மாவட்டத்தில் 133 திருமணங்களும் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு இரு மாவட்டங்களிலும் முறையே 62 மற்றும் 49 குழந்தை திருமணங்கள் பதிவான நிலையில், இந்தாண்டு இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. அ

திகளவில் குழந்தை திருமணங்கள் பதிவாகியுள்ள முதல் 10 மாவட்டங்களில் 6 மேற்கு மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஈரோடு தவிர, கோவை 90, நாமக்கல் 74, திருப்பூர் 66, தருமபுரி 58 மற்றும் சேலம் 51. டாப் 10 இடங்களில் நாமக்கல் இருந்தாலும், 2022 முதல் தொடர்ந்து எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

2024ஆம் ஆண்டில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்துக்கும் அதிகமானவை பெரம்பலூர் 94, திண்டுக்கல் 77 மற்றும் திருப்பத்தூர் 66 உள்ளடக்கிய முதல் 10 மாவட்டங்கள் ஆகும்.

கடந்த ஆண்டைக் காட்டிலும், பெரம்பலூர், திருப்பத்தூர், கோவை, தருமபுரி, திருப்பூர், நாகப்பட்டினம் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது.

அரியலூரில் கடந்தாண்டு 2 ஆக இருந்த எண்ணிக்கை இந்தாண்டு 31 ஆக உயர்ந்துள்ளது.

குழந்தை திருமணங்களின் அதிகரிப்புக்கு பொருளாதார அழுத்தம், சாதி ரீதியிலான அழுத்தங்கள், விழிப்புணர்வு குறைவு ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதைத் தடுக்கும் நோக்கில் பெண் குழந்தைகள் உயர்க்கல்வியைத் தொடர புதுமைப் பெண் போன்ற திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள சூழலில், குழந்தை திருமணம் அதிகரிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: New Indian Express