டில்லி,

நாட்டில் பல மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், குழந்தை திருமணம் குறித்து உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு கூறி உள்ளது.

18 வயதுக்குப்பட்ட பெண்ணை மணந்து கணவர் உறவு வைத்தால் பலாத்காரமாக கருதப்படும் என்று உச்சநீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. குழந்தை திருமணத்தை தடுக்கக் கோரிய வழக்கில் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில், 18 வயது நிரம்புவதற்கு முன் திருமணமாகும் பெண்களின் சதவீதம் அச்சமூட்டும் வகையில் எச்சரிக்கை தருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் குழந்தைகளின் திருமணம் அதிக அளவில் நடந்து வருகிறது.

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான்,  உத்திரப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் அதிக அளவு குழந்தைகள் திருமணம் நடைபெறுவதாக  யூனிசெப் (UNICEF) நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

நமது நாட்டில் திருமண வயது பெண்களுக்கு 18 என்றும் ஆண்களுக்கு 21 என்றும் சட்டம் உள்ளது. ஆனாலும்,  கிராமப்புறங்களில் 56 சதவீதம் பெண்களுக்கு 18 வயதிற்கு முன்பே திருமணமாகி விடுகிறது என்ற தகவலும், மேலும் உலகெங்கும் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் 40 சதவீதம் இந்தியாவில்தான் நடக்கிறது என்றும் யுனிசெப்பில் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் நடைபெற்று வரும் குழந்தை திருமணம் தடுப்பது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில்  உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

18வயதுக்கு  குறைவான தன் மனைவியுடன் கணவர் உடலுறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமையாகாவே கருதப்படும் என்றும் 15வயது முதல் 18 வயதுக்குள் உடலுறவு கொண்டாலும் பாலியல் வன்கொடுமையே என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள்  ஓராண்டுக்குள் புகார் கொடுத்தால் அதுகுறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளது.

ஏற்கனவே  வயது  குறைவான பெண்ணுடன்  உறவு கொள்வது சட்ட விரோதம் அல்ல என்ற சட்ட ஷரத்து தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது.