புலந்த்ஷகர், உத்தரப்பிரதேசம்
கொரோனா ஊரடங்கால் அதிகரித்து வரும் குழந்தை திருமணத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இரு சிறுமிகள் தப்பித்துள்ளனர்.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற அமைச்சகம் குழந்தைகள் திருமணம் குறித்து புகார் அளிக்க 1098 என்னும் தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இந்த எண்ணுக்குக் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மொத்தம் 18,324 புகார்கள் வந்துள்ளன. இதற்கு முந்தைய இரு வருடங்களில் இதே கால கட்டங்களில் கிடைத்த புகாரை விட இது மிகவும் அதிகமானதாகும்.
இந்த ஆண்டு மார்ச் இறுதி வாரத்தில் கொரோனா பரவுதலைத் தடுக்க ஊரடங்கு அமலாக்கப்பட்டது. அதையொட்டி பள்ளிகள் மூடப்பட்டன. இதையொட்டி பல இடங்களில் பெண்கள் வீட்டை விட்டு ஓடி விடலாம் எனச் சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே பல பெற்றோர்கள் பள்ளியில் படிக்கும் தங்கள் பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இவ்வாறு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்களில் புலந்த்ஷ்கரை சேர்ந்த ஒரு சிறுமி பற்றி இங்கு பார்ப்போம். இந்த பெண்ணுடைய சகோதரர் வகுப்புக்கள் இல்லாததால் தனது சகோதரி வழி மாறி விடுவார் எனச் சந்தேகித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அறுவது வயதைக் கடந்தவர்கள் என்பதால் அவர்கள் மகனின் வற்புறுத்தலுக்கு இணங்க திருமணம் நிச்சயம் செய்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் நடந்த ஒரு பண்டிகைக்குப் பிறகு அந்த சிறுமி வீட்டை விடு வெளியேறி தனது ஆசிரியையிடம் அடைக்கலம் அடைந்துள்ளார். தனக்கு இத்தனை சிறு வயதில் மணமுடிக்க விருப்பம் இல்லை எனவும் அதை தடுக்க வேண்டும் எனவும் ஆசிரியையிடம் சிறுமி கோரிக்கை வைத்துள்ளார். அதன்பிறகு குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் உதவியுடன் அந்த சிறுமிக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதே புலந்த்ஷகர் மாவட்டத்தில் உள்ள வீர்பூர் என்னும் சிற்றூரில் மற்றொரு 16 வயது சிறுமியின் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பெண்ணின் தாய் ஊரடங்கு காரணமாக வீட்டில் அனைவருக்கும் பணி இல்லை என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதைக் காட்டி மிரட்டி இந்த சிறுமியை குழந்தை திருமணத்துக்கு கட்டாயபடுத்தி உள்ளார். அந்த மாப்பிள்ளை வரதட்சிணை கேட்கவில்லை என்னும் ஒரே காரணத்துக்காக இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னர் குறிப்பிட்ட 12 வயது சிறுமியின் திருமணம் நிறுத்தப்பட்டதை அறிந்த இந்தப் பெண் உடனடியாக புகார் அளித்து தனது திருமணத்தை நிறுத்தி உள்ளார். இந்த சிறுமியின் தாயார் இந்த திருமணம் நிறுத்தப்பட்டது குறித்து கடும் கோபம் அடைந்துள்ளார்.
அவர் அதிகாரிகளிடம், “இப்போது இந்த திருமணத்தை நிறுத்தி உள்ளீர்கள். ஆனால் இன்னும் 2 வருடங்களுக்குப் பிறகு என் மகள் 18 ஆம் வயதில் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படி இருக்க இரு வருடங்களுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டால் என்ன?” எனக் கூச்சலிட்டது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.