சென்னை: தமிழகத்தில்  சென்னை உள்பட 6 மாவட்டங்களில் கொசுக்களால் பரவும்  சிக்குன் குனியா காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து, தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்களின் கை, கால்களை முடக்கும் சிக்கன் குனியா எனப்படும் காய்ச்சல் நோய் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தேனி, தென்காசியில் சிக்கன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ளது இதையடுத்து, மக்கள் சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்படி சுகாதாரத்துறை எச்சரித்துள்து.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சிக்குன் குனியா தீவிரமாக பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், பின்னர் அரசு மேற்கொண்ட தொடர் தடுப்பு நடவடிக்கைகளால் அது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு டெங்கு மற்றும்ய மூளை காய்ச்சல் போன்ற கொசு மூலம் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரித்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சிக்குன் குனியா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரித்து வந்தனர். ஆரம்பத்தில் இதனை அரசு தரப்பு மறுத்திருந்தாலும், தற்போது பல மாவட்டங்களில் நோய் பரவல் உறுதியாகியுள்ளது.

நன்னீர் தேங்கி நிற்கும் இடங்களில் உருவாகும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் மூலம் பரவும் சிக்குன் குனியா நோய், மீண்டும் தமிழகத்தில் தலைதூக்கத் தொடங்கி உள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திடீரென காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, தசை வலி, உடல் சோர்வு, சிலருக்கு வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. குறிப்பாக மூட்டு வலி நீண்ட நாட்கள் தொடரக்கூடியதாக இருப்பதால், நோயாளிகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், தென்காசி, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிக்குன் குனியா பாதிப்பு அதிகரித்திருப்பதை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து, நோய் பரவலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள  சுற்றறிக்கையில், அனைத்து மாவட்டங்களிலும் நோய் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் சிக்குன் குனியா பரிசோதனைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும். டெங்கு மற்றும் சிக்குன் குனியா நோயாளிகளுக்காக தனித்தனி வார்டுகளை அமைப்பது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், எலிசா (ELISA) பரிசோதனைகளுக்குத் தேவையான உபகரணங்கள் போதிய அளவில் இருப்பில் வைத்திருக்க வேண்டும். நடமாடும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். வீடுதோறும் கொசு உற்பத்தி நடைபெறும் இடங்களை கண்டறிந்து அழிக்கும் பணியில் கூடுதல் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும். திடக் கழிவுகள் மற்றும் நீர் தேங்கும் இடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குடிநீர் பற்றாக்குறை காரணமாக மக்கள் நீரை சேமித்து வைப்பதைத் தவிர்க்க, தடையற்ற குடிநீர் வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும். சிக்குன் குனியா பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ‘ஏடிஸ்’ கொசுக்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி, வைரஸ் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, பொதுமக்களிடையே சிக்குன் குனியா குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

சிறப்பு புள்ளிகள்

உபகரணங்களையும் முன்கூட்டியே கையிருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்கு மற்றும் சிக்குன் குனியா நோயாளிகளுக்காக மருத்துவமனைகளில் தனித்தனி சிறப்பு வார்டுகளை உடனடியாக அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவசர சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில் நடமாடும் மருத்துவ விரைவு குழுக்கள் எப்போதும் செயல்படும் நிலையில் தயார் வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொசு உற்பத்திக்கு காரணமாகும் தண்ணீர் தேங்கும் பொருட்கள் அனைத்தையும் உடனடியாக அகற்றி அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடுவீடாகச் சென்று கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த, போதிய எண்ணிக்கையிலான பணியாளர்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]