இங்கிலாந்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிக்கன்குனியா நோய் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையில் 73 பேருக்கு சிக்கன்குனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, 2024ம் ஆண்டு இதேகால கட்டத்தில் 27 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருந்தது.

இலங்கை, இந்தியா மற்றும் மொரிசியஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்று திரும்புபவர்களிடையே இந்த நோய் பரவல் காணப்படுகிறது.

வெப்ப மண்டலங்களில் வாழும் கொசுக்கள் மூலம் மனிதனுக்கு மனிதன் பரவக்கூடிய இந்த நோய் குறித்து எச்சரித்துள்ள இங்கிலாந்து சுகாதாரத்துறை விடுமுறைக்கு வெளியூர் சென்று திரும்புபவர்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளில் சிக்கன்குனியா நோய் அதிகரித்து வருவதாகவும், 2025ம் ஆண்டில் இதுவரை பிரேசிலில் அதிகளவாக 185000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சிக்கன் குனியா நோயை பரப்பக்கூடிய இரண்டு வகையான கொசுக்கள் இங்கிலாந்தில் இல்லை என்றபோதும் வெளிநாடுகளில் இருந்து நோய் பாதிப்புடன் வருபவர்களால் இந்த ஆண்டு உள்ளூரில் 31 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது அந்நாட்டு சுகாதாரத் துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உலகம் முழுவதும் 16 நாடுகளில் 240000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் 90 பேர் பலியாகி உள்ளனர்.

கொசுக் கடி மூலமாக மனிதர்களுக்கு பரவும் இந்த சிக்கன் குனியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு வலியுடன், காய்ச்சல், மூட்டு வீக்கம், தசை வலி, தலைவலி, குமட்டல், சோர்வு மற்றும் தடிப்புகள் போன்ற அறிகுறி தென்படும்.

இவ்வகை காய்ச்சல் 1950ம் ஆண்டுகளில் டான்சனியா நாட்டில் முதன்முதலில் பரவ தொடங்கிய போது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிமிர்ந்து நடக்க சிரமப்பட்டு வளைந்து நடப்பதால் டான்சனிய மொழியில் சிக்கன்குனியா என்று இதை அழைக்கத்தனர்.