சென்னை:
வசர பயண அனுமதி வழங்க முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவசர பயண அனுமதி வழங்கும் அதிகாரம், கார்ப்பரேசன் கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே வேளையில் தாசில்தார், துனண கமிஷனர் ஆகியோருக்கு அவசர பயண அனுமதி வழங்கும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ளது. இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சில அவசர தேவைகளுக்காக சென்னையில் இருந்து வேறு மாவட்டங்கள் செல்வதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சென்னை காவல்துறை சார்பில் கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டு திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளியூர் செல்லும் மக்கள் விண்ணப்பித்து, அதற்கான அனுமதி அட்டை பெற்று செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 7530001100 என்ற எண்ணிலும், gpcorona2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதுவரை இ மெயில் மூலம் மட்டும் விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை ஐயாயிரத்தை தாண்டியுள்ளது. இவற்றுள் காரணங்களை கேட்டறிந்து பத்து பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும், ஏராளமான மக்கள் சாலைகளில் செல்வதை பார்க்க முடிகிறது. இதை தடுக்கும் வகையில், அவசர பயண அனுமதி வழங்க முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவசர பயணத்துக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு, குறிப்பாக, திருமணம், மருத்துவ சிகிச்சைக்கு செல்லுதல், இறப்பு செல்லுதல் போன்றவைகளுக்கு மட்டுமே கார்ப்பரேசன் கமிஷனர், மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே அனுமதி பாஸ் வழங்க வேண்டும் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.