தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளுதல், சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், நீர்வள ஆதாரம், நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த் துறை செயலர்கள், மாநகராட்சி ஆணையர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர், குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர், பேரிடர் மேலாண் இயக்குநர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக இணை மேலாண்மை இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இநத் ஆய்வு கூட்டத்தில், பருவமழை தொடங்குவதற்கு முன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், தடுப்பரண் அமைத்தல், மின்சார கம்பங்கள் மற்றும் குடிநீர்க் குழாய்களை மாற்றியமைத்தல் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் இந்த கூட்டத்தில் பேசிய தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து மழைநீர் வடிகால் பணிகள், பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் கல்வெட்டு தூர்வாரும் பணிகள் மற்றும் அனைத்து மழைநீர் வடிகால்களைத் தூர்வாரும் பணிகளை செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
சென்னை அவ்வை சண்முகம்சாலையில் மழைநீர் வடிகால் பணிகளை மெதுவாக மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கூறயவர், பராக்கா சாலையில் மெதுவாக நடைபெறும் பணியை வேறு ஒரு ஒப்பந்ததாரர் முலம் விரைந்து முடிக்க வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுட்ம் என்றும், புஸ்பவதி கால்வாயின் மேல்தளத்தை உடைத்து, தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். திருவள்ளுவர் நகர் நீர்மட்டத்தை ஆய்வுசெய்ய வேண்டும். அனைத்து வடிகால் பணிகளையும் இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
தாம்பரம் மாநகராட்சியில்… தாம்பரம் மாநகராட்சியில் ராமன் தெரு மற்றும் சிட்லப்பாக்கம் பகுதிகளில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளையும் விரைவில் முடிக்க வேண்டும். வண்டல் சேகரிப்புத் தொட்டி அமைக்கும் பணிகளையும் செப். 30-க்குள் முடிக்க வேண்டும். அதேபோல, ஆவடி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் விரைவில் முடிக்க வேண்டும்.
காளியம்மன் கோயில் தெருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி, பனகல் பூங்காவில் கீழ்நிலை நீர்த்தொட்டி அமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். போட்கிளப் சாலையில் மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ள பகுதியில் மழைநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் வடபழனி ஆற்காடு சாலை, வளசரவாக்கம் பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரில், ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் வடிகால் அமைக்க நெடுஞ்சாலைத் துறை அனுமதி பெற்று, 45 நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும்.
சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளுக்கு பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்ந்து களஆய்வு மேற்கொண்டு, பல்வேறு துறை அலுவலர் களுடன் ஒருங்கிணைந்து, பருவ மழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.