சென்னை: தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தலைமைச்செயலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர்கள் சங்கமான டிட்டோஜாக் அறிவித்துள்ள நிலையில், அரசுடன் பேச்சுவார்த்தை வருமாறு பள்ளி கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
டிட்டோஜாக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தங்களது கோரிக்கைகைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அவர்களின் கோரிக்கைகளலான, அரசாணை எண் 243-ஐ நீக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு போராட்டங்களை தொடர்ந்து வருகிறது.
ஏற்கனவே கடந்த 10ந்தேதி (செப்டம்பர் 10) ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்தது. இதைத்தொடர்ந்து, செப்.30 மற்றும் அக்.1-ஆம் தேதிகளில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று டிட்டோஜாக் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து, பேச்சுவாா்த்தைக்கு வருமாறு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் நரேஷ் வெளியிட்ட செய்திகுறிப்பில், தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் செப்.30 மற்றும் அக்.1-ஆம் தேதிகளில் நடைபெறும் என்று டிட்டோஜாக் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து அதன் மாநில நிா்வாகிகளுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் திங்கள்கிழமை (செப். 23) காலை 9.15 மணிக்கு பேச்சுவாா்த்தை நடத்த உள்ளாா்.
அந்தக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள சங்கங்களில் இருந்து தலா ஒருவா் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
போராட்டத்தில் கலந்து கொள்ள ஆசிரியர்களை போராட்டக்குழு வற்புறுத்தக்கூடாது! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை