சென்னை:
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வைரவிழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் சில மாநில முதல்வர்கள் , புறக்கணிக்க இருப்பதாக தகவல்வகள் வெளியாகி உள்ளன.
தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபை உறுப்பினராகி, இந்த வருடத்துடன் 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதற்கான வைர விழா, சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், வரும் ஜூன், 3ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை தி.மு.க.வினர் பிரம்மாண்டமாக செய்துவருகிறார்கள்.
இந்த விழாவில் கலந்துகொள்ள பாஜக தவிர பிற பெரிய கட்சிகள் அனைத்துக்கும் தி.மு.க. அழைப்பு விடுத்துள்ளது.
காங்கிரஸ் தலைவர், சோனியா, உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளாதால், இவ்விழாவில் காங்., துணைத்தலைவர் ராகுல் கலந்து கொள்கிறார். பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்கின்றனர். கம்யூனிஸ்ட் உட்பட பிற கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள்.
அதே நேரம் கர்நாடக முதல்வர், சித்தராமையாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டும் அவர் பங்கேற்கமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. காவிரி விவகாரம் இதற்குக் காரணமாக சொல்லப்படுகிறது.
அதே போல மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் சொல்லப்படவில்லை.