சென்னை:
தமிழக சட்டபேரவையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை தாக்கல் செய்தார்.
அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, துப்பாக்கிச் சூடு என்ற வார்த்தையே முதலமைச்சர் தாக்கல் செய்த அறிக்கையில் இல்லை,கண்ணீர் புகைக்குண்டு வீசிதான் கலவரத்தை கட்டுப்படுத்தியதாக விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
சமூக விரோதிகள் ஊடுருவல் என முதலமைச்சர் கூறுவது மக்களை அவமானப்படுத்தும் செயல், போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார் இது கண்டனத்துக்கு உரியது என்று கூறினார்.
சீருடையில் இல்லாத போலீசாரும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர், போராட்டக்காரர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட வில்லை என்ற ஸ்டாலின், இந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவிக்க முதலமைச்சருக்கு 5 நாள் தேவைப்பட்டுள்ளது துப்பாக்கிச் சூட்டை தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என முதலமைச்சர் கூறியுள்ளார் .
மேலும், தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை கண்துடைப்பு என்ற ஸ்டாலின் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.
இது குறித்து பேசிய ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ, டிடிவி தினகரன், தூத்துக்குடி சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினார். விசாரணை ஆணையம் கண்துடைப்பு எனவும், ஸ்டெர்லைட்டை முழுவதுமாக மூடவில்லை எனவும் மக்கள் நினைக்கின்றனர் என்றார். இதைத்தொடர்ந்து அவருக்கும் அதிமுக உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
அதன்பிறகு பேசிய எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கேள்வி. பொதுமக்களை தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
முதல்வர் தாக்கல் செய்த அறிக்கையில் துப்பாக்கி சூடு சம்பவம், எத்தனை பேர் உயிரிழப்பு, எத்தனை பேர் காயம் போன்ற எந்தவித விவரமும் இல்லாததால் திமுக உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசுக்கு எதிராக சட்டமன்றத்தினுள் அமளியில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.