சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு திடீரென ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், அவரது மதுரை பசும்பொன் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பசும்பொன்னில் நாளை நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் வகையில் இவர் இன்று மதுரை செல்வதாக அறிக்கப்பட்டது. தொடர்ந்து நாளை காலை, மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என்றும் தொடர்ந்து மருபாண்டியர் சிலைக்கும் மரியாதை செய்துவிட்டு பசும்பொன் சென்று தேவர் சமாதியில் மரியாதை செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,  மு.க.ஸ்டாலின் நேற்றிரவு திடீரென ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அவர்  முதுகுவலி காரணமாக மருத்துவ பரிசோதனைக்கா அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் சோதனை முடிந்து அவர் அதிகாலை விடு திரும்பினார்.

 இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் முதுகு வலிக்கான வழக்கமான பரிசோதனையை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அவரது மதுரை பயணம் கேள்விக்குறியானது.

இந்த நிலையில், அவரது மதுரை, பசும்பொன் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  முதலமைச்சர் அவர்களுக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதால், நீண்ட பயணங்களைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.

எனவே, வரும் 30-10-2022 அன்று இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் மற்றும் குரு பூஜையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சார்பில், மூத்த அமைச்சர்களான மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு,மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் இவ்விழாவில் நேரில் கலந்துகொண்டு, மரியாதை செலுத்துவார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.