சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பல்வேறு பணிகளுக்கு இடையே அவர் உடல்நலத்தை பேணி காக்கும் வகையில் ஒர்க்அவுட் செய்வது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
உடல்நலத்தில் தீவிர அக்கறை கொண்டவர் மறைந்த முதல்வர் கருணாநிதி. அவரைப் பின்பற்றியே அவரது மகனும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலினும் உடல்நலம் அக்கறைக்கொண்டு பயிற்சிகள் செய்து வருகிறார். அடிக்கடி சைக்கிளில் கிழக்கு கடற்கரையில் பயணம் செய்வது ஸ்டாலினின் வாடிக்கை. வார ஞாயிற்றுக்கிழமைகளில் கிழக்கு கடற்கரைச் சாலையில் நீலாங்கரை முதல் மாமல்லபுரம் வரை சைக்கிள் பயணம் செய்து, உடல்நலத்தை பேணி காத்து வருகிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்த சமயத்தில்கூட ரிலாக்ஸாக அவர் சைக்கிளிங் சென்றார்.
தேர்தல் முடிவுக்கு பிறகு, வெற்றிபெற்று ஆட்சியை அமைத்து முதல்வராக பதவி ஏற்ற பிறகு அரசின் நிர்வாக நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டியதிருப்பதால், கடந்த 2 மாதங்களாக ஸ்டாலினால் சைக்கிள் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. உடல்நலத்தை அக்கறை செலுத்த நேரமில்லாத நிலை உருவானது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் தனது வழக்கமான பணிகளுடன் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தனது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளர் ஒருவரது வழிகாட்டுதலில் தினந்தோறும் எளிய முறையிலான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது, அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில வைரலாகி வருகின்றன.