சென்னை: கோவையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தொற்று பரவல் குறித்து ஆய்வு மேற்கொள்ள வரும் 30ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை செல்கிறார்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் குறையத்தொடங்கி உள்ளது. ஆனால்,‘ கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவீரமடைந்து உள்ளது.  மேலும் திருப்பூர், சேலம், திருச்சி,  மதுரை மாவட்டங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்று மட்டும்  4,734 பேருக்கு தொற்று உறுதியானதுடன்,  32 பேர் உயிரிழந்தனர்.இதையடுத்து,  அங்கு  தமிழகஅரசு சிறப்பு அதிகாரியாக சித்திக் ஐஏஎஸ்  நியமித்து தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்,கோவை மாவட்டத்தில் கொரோனா நிலவரம் குறித்து  முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரடியாக சென்று அங்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்காக நாளை மறுநாள்(மே 30) கோவைக்குச் சென்று அங்கு பல்வேறு இடங்களில் அவர் நேரடியாக ஆய்வுசெய்கிறார்.

கோவையில் தொற்று பரவல் அதிகரிப்புக்கு  மக்கள் மெத்தனமாக இருப்பதே என குற்றம் சாட்டப்படுகிறது. மேலும்,  கோவை மாவட்டத்தில் மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை அதிகமாக உள்ளது என்றும்,   `கோவையில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு தடுப்பூசி வழங்கவில்லை’ எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.