சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் நடைபயணத்தை  தொடங்கி வைக்க இன்று குமரி மாவட்டம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் 9ந்தேதி வரை தென்மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இன்று குமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்குகிகறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ராகுலிடம் தேசியகொடி வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைக்கிறார். இதற்காக, முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இன்று காலை விமானம் மூலம்  தூத்துக்குடி செல்கிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி செல்கிறார்.

கன்னியாகுமரியில், ராகுல் பாதயாத்திரையை தொடங்கி வைக்கும் ஸ்டாலின்,  நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து புறப்பட்டு, திருநெல்வேலி சென்று, அங்கு இரவு தங்குகிறார்.

நாளை (8-ம் தேதி) திருநெல்வேலி ஹைகிரவுண்டு பகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர், அங்கிருந்து விருதுநகர் சென்று, திமுக முப்பெரும் விழா நடைபெறும் இடத்தைப் பார்வையிடுகிறார், நாளை இரவு  மதுரைக்குச் செல்கிறார்.

மதுரையில் இரவு தங்கும் ஸ்டாலின் வரும் 9-ம் தேதி காலை, அமைச்சர் பி.மூர்த்தி இல்லத் திருமண விழாவில் பங்கேற்கிறார்.

பின்னர் மதுரை தமுக்கம் மைதானத்தில் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, அருகில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தைப் பார்வையிடுகிறார். அன்று இரவு  சென்னை திரும்புகிறார்.