சென்னை: திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெறும் செப்டம்பர் 15ந்தேதி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உடன்பிறப்புகளுக்கு எழுதிய, 4,041 கடிதங்கள் அடங்கிய நூல்கள் வெளியிடப்பட உள்ளது.
திமுக சார்பில், திமுக தொடங்கப்பட்ட நாள், பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள் ஆகியவற்றை கொண்டு முப்பெரும்விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ந்தேதி, தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17, திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய இந்த மூன்று முக்கிய நிகழ்வுகளையும் இணைத்துக் கொண்டாடப்படும் திமுகவின் முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த முப்பெரும் விழாவானது மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந்தேதி திமுக முப்பெரும் விழா ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரமாண்டமாக நடைபெறாத நிலையில், நடப்பாண்டு, வரும் 15ஆம் தேதி விருதுநகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், இந்த முப்பெரும் விழாவின்போது வழங்கப்படும் விருதுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனப்டி, பெரியார் விருது – சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது – கோவை இரா. மோகனுக்கும், கலைஞர் விருது – திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பிக்கும், பாவேந்தர் விருது – புதுச்சேரி சி.பி. திருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருது – குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுகள், செப்டம்பர் 15ஆம் தேதி விருதுநகரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்படுகிறது. அத்துடன் மறைந்த திமுக தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதி, கட்சி உடன்பிறப்புகளுக்கு எழுதிய 4,041 கடிதங்கள் அடங்கிய தொகுப்பு நூல்கள் வெளியிடப்படவுள்ளது.
திமுக தொண்டர்களை அவ்வப்போது உற்சாகப்படுத்தும் நோக்கத்திலும், கட்சி தொடர்பான அறிவிப்புகள், மாநாடுகள், தேர்தல் என பல நிகழ்வுகள் குறித்து, தொண்டர்களுக்கு தெரிவிக்கும் வகையில், அழகு தமிழில் உடன்பிறப்பே என்று தொடங்கி விவரங்களை அழகாக கோடிட்டு காட்டி கடிதம் எழுதுவது வழக்கம். இந்த கடிதங்கள் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியாகும். இந்த கடிதங்களுக்கு திமுகவினரிடையே பெரும் வரவேற்பு உண்டு. அவரின் கடிதத்தை வாசிப்பதற்காகவே முரசொலியை வாங்கிப் படிப்பவர்கள் அதிகம் உண்டு.
இந்த கடிதங்கள் தொகுக்கப்பட்டு உள்ளது. அவர் எழுதிய 4,041 கடிதங்கள் தொகுப்பட்டு நூலாக வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இந்த நூல்கள்,விருதுநகரில் நடைபெறும் முன்பெரும் விழாவில் வெளியிடப்பட உள்ளது. விழாவில், திமுக தலைவரும், மாநில முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பெற்றுக் கொள்கிறார்.
1968ஆம் ஆண்டு முதல் 2018 வரையில், திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய 4041 கடிதங்களின் தொகுப்பு நூல்களை சீதை படிப்பகத்தின் உரிமையாளர் கௌரா ராஜசேகரன் பதிப்பித்துள்ளார். 21,510 பக்கங்களில் கருணாநிதி எழுதிய அனைத்துக் கடிதங்களும் தொகுக்கப்பட்டு, 54தொகுதிகளாக வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.