சென்னை: கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்து வரும், கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்கள் நவம்பர் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக நெரிசலில் சிக்கி தவித்து வந்த வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சென்னை கோயம்பேடு, வேளச்சேரி புதிய மேம்பாலங்கள் வரும் நவம்பர் 1-ஆம் தேதி திறக்கப்படுகிறது. இந்த பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

கோயம்பேடு பகுதியில் ஏற்பட்டுள்ள நெரிசலை குறைக்கும் வகையில், ரூ.100 கோடி ரூபாய் செலவில் உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த பாலத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படாத காரணத்தால், தினந்தோறும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியுற்று வந்தனர். இதையடுத்து, அந்த பாலத்தை நவம்பர் 1ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

அதுபோல,  வேளச்சேரியில் ஏற்படும் கடுமையான நெரிசலுக்கு தீர்வு காண, 108 கோடி ரூபாயில், இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட முடிவு செய்து, கடந்த  2016ம் ஆண்டு  பிப்ரவரியில். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பணியை துவக்கி வைத்தார். சென்னையில், முதன்முறையாக கட்டப்படும் இரண்டடுக்கு மேம்பாலம் இது தான்.

இந்த மேம்பாலத்துக்காக தரமணி சாலையில் இருந்து விரைவு சாலை வரை, 36 துாண்கள் அமைக்கப்பட்டு வந்தது. இதன், மைய பகுதி, 50 அடி உயரம் உடையது.அதேபோல், விரைவு சாலையில் இருந்து, தாம்பரம் சாலை வரை, 17 துாண்கள் அமைத்து பாலம் கட்டப்படுகிறது. இதன் மைய பகுதி, 25 அடி உயரம் உடையது.இரண்டு ஆண்டில், அனைத்து பணிகளும் முடிய வேண்டியது. நிலஆர்ஜிதம், குழாய் மாற்றி அமைப்பது போன்ற பணிகளால், மேம்பாலம் கட்டும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்களும் முடிவடைந்த நிலையில், மீண்டும் பணிகள் தொடங்கியது.  இதையடுத்து, இந்த பாலத்தின்  ஒரு வழித்தடத்தை அடுத்த மாதம் திறக்க, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி,  வேளச்சேரி இரண்டடுக்கு மேம்பாலத்தில் பணிகள் முடிவடைந்த ஒரு வழித்தடத்தை, நவம்பர் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

இந்த இரு மேம்பாலங்களையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பதால் வாகன நெரிசல் குறையும் என வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.