சென்னை: ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது, இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
தமிழ்நாட்டில் நவம்பர் 1ந்தேதி தொடக்கப்பள்ளிகள் திறப்பது தொடர்பாகவும், வீடு தேடி கல்வி திட்டம் குறித்தும், தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி அலுவலக வளாகத்தில் (டி.பி.ஐ.) ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் குறித்து விழிப்புணர்வு வாகனங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்த இணையதளத்தில், ‘இல்லம் தேடி கல்வி’ ( illamthedikalvi.tnschools.gov.in ) திட்டத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்பும் கல்வி தகுதியுடைய தன்னார்வலர்கள் பதிவு செய்வவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. அதையடுத்து, ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் என்ற கையேட்டினை பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டார். அதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த திட்ட பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் இரா.சுதன், கூடுதல் திட்ட இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் என்.லதா, தொடக்க கல்வி இயக்குனர் க.அறிவொளி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கொரோனா பரவல் காலத்தில் ஏற்பட்ட மாணவர்களின் கற்றல் இடைவெளிகளை குறைப்பதற்காக ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனறார்.
1-ம் முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு 12-ம் வகுப்பு வரை படித்தவர்களும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவர் களுக்கு பாடம் நடத்துவதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்த தன்னார்வலர்களும், இல்லம் தேடி கல்வி திட்டத்தின்படி, மாணாக்கர்களுக்கு மாலை நேரத்தில் படிப்பு சொல்லிக் கொடுக்கும் வகையில் (Tution) தற்போது தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்ததிட்டம் நவம்பர் 15-ந் தேதி செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏதேனும் ஒரு மாவட்டத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார்.
முதற்கட்டமாக கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, தஞ்சை, திருச்சி, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சுமார் 6 மாதம் வரையில் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின்படி, நகர்ப்புறங்களில் பள்ளிக்கூடங்களிலும், கிராமப்புறங்களில் சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் வகுப்பு எடுக்க வேண்டும். தமிழக அரசின் தொடக்கப்பள்ளிகளில் 34 லட்சம் மாணவர்கள் உள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி தனியார் பள்ளி மாணவர்களும் கலந்துகொள்ளலாம்.
வகுப்புகள் எடுக்கும் தன்னார்வலர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. பள்ளி கட்டணம் கட்டினால் தான் அனுமதிப்போம் என்று மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க கூடாது என்று தனியார் பள்ளிகளை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
மேலும், தற்போதைக்கு தமிழ்நாட்டில் நர்சரி பள்ளி திறப்பு இல்லை என்று கூறியவர், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பின்னர் திறக்கப்படும். ஆனால், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தான் நவம்பர் 1-ந் தேதி முதல் திறக்கப்பட இருக்கிறது.
இவ்வாறு கூறினார்.
கொரோனா பரவல் காரணமாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளியில் நேரடியாக கல்வி கற்க முடியாததால் மாணவர்களின் கற்றல் திறனில் இடைவெளி ஏற்பட்டது. எனவே இந்த கற்றல் இழப்பை ஈடு செய்வதற்காக புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்கு ‘இல்லம் தேடி கல்வி’ என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.