சென்னை: திருமுல்லைவாயலில் 101 நரிக்குறவர் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு, குடும்ப அட்டை உள்பட நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கும் வகையில், இன்று காலை அங்கு சென்ற முதல்வர், அவர்களை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டைகள், முதியோர் உதவித் தொகை உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் ரூ.36 லட்சம் மதிப்பில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார்.
அதன்படி, திருமுல்லைவாயல் குடியிருப்பு பகுதியில் உள்ள ஜெயா நகரில் நரிக்குறவர் பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை 39 நபர்களுக்கும், குடும்ப அட்டை 20 நபர்களுக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 4 நபர்களுக்கும் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி 38 நபர்களுக்கும் என மொத்தம் 101 நரிக்குறவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முதலமைச்சருக்கு குறவர் இன மக்கள் நன்றி தெரிவித்தனர்.