சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய தனியார் மருத்துவமனையில் பதிவு செய்துள்ளார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் உறுப்பு தான தின நிகழ்ச்சி தமிழ்நாடு  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில், , இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  பங்கேற்து,  உடல் உறுப்பு மாற்று விழிப்புணர்வு கையேடு மற்றும் ”மறுபிறவி” என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு குறுந்தகட்டினை வெளியிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், உடல் உறுப்புதானம் செய்தவர்கள் குடும்பத்தினர், மற்றும்  றுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்  மா.சுப்பிரமணியன்,  தமிழ்நாட்டில், உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 1998 உறுப்புக் கொடையாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 2021 முதல் தற்போது வரை 585 பேர் உடலுறுப்பு தானம் செய்திருக்கிறார்கள்.

முதலமைச்சர் ஸ்டாலினும் உடல் உறுப்பு தானம் செய்துள்ளதாக கூறிய அமைச்சர், அவர்  சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் பதிவு செய்துள்ளதாகவும் கூறினார். உடல் உறுப்பு தானத்தில் 8 ஆண்டுகளாக தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது.

இதுவரை உறுப்பு தானம் வாயிலாக 892 இதயங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும்,  நுரையீரல் 912, கல்லீரல் 1,794, சிறுநீரகம் 3,544, கணையம் 42, சிறுகுடல் 15, வயிறு 1, கைகள் 7 என 7,207 முக்கிய உறுப்புகள்  தானமாக பெறப்பட்டு பயன்பாடு பெற்றிருக்கிறது.

இன்னும் ஏராளமானோர் உடல் உறுப்புகளுக்காக  பதிவு செய்து காத்திருக்கின்றனர்.  சிறுநீரகம் வேண்டி  பதிவு செய்து காத்திருப்பவர் 7,106  ஆக உள்ளது. அதபோல  கல்லீரல் வேண்டி காத்திருப்பவர் எண்ணிக்கை 416 பேர், இதயத்திற்காக 83 பேர், நுரையீரல் வேண்டி காத்திருப்பவர் 54 பேர், இதயம் மற்றும் நுரையீரல் வேண்டி காத்திருப்பவர் 24 பேர், கணையம், கைகள், சிறுகுடல், வயிறு, சிறுநீரகம், இதயம் என 7,797 பேர் உடலுறுப்பு வேண்டி காத்திருப்பவர்களாக உள்ளனர்.

இவர்களுக்கு விடியல் என்னும் இணையதளம் தொடங்கி அதன்மூலம் ஒவ்வொருவருக்கும் அவர்கள் பதிவு செய்திருக்கும் காலத்தினை பொறுத்து, உடலுறுப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.