சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான காமராஜர் அரங்கத்தில், மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மறைந்த  முன்னாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் படங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து புகழாரம் சூட்டினார்.

உலகப் பொருளாதார மேதை, முன்னாள் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் படத்திறப்பு – புகழஞ்சலி கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், மன்மோகன் சிங் மற்றும் இவிகேஎஸ் இளங்கோவன் படங்களை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற கூட்டணி கட்சி தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மலர் தூவி மரியாதை செய்தனர். இதையடுத்து புகழஞ்சி கூட்டம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர்,  உள்பட மூத்த தலைவர்கள்,   திக தலைவர் வீரமணி, கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள்,  விசிக தலைவர் திருமாவளவன் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள்,   கலந்துகொண்டு, புகழஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது,

“நெருக்கடியான காலத்தில் நிதி அமைச்சராக பொறுப்பேற்று சரித்திரத்தில் இடம்பிடித்தார் மன்மோகன் சிங். அவரது அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தூணாக இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் என 2 பெரிய தலைவர்களை அடுத்தடுத்து நாம் இழந்துள்ளோம். இருவரின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் இழப்பு தான்.

10 ஆண்டு காலம் பிரதமர் பொறுப்பில் இருந்து ஆட்சியை நடத்தி காட்டியவர் மன்மோகன்சிங். 10 ஆண்டு கால மன்மோகன் சிங் அமைச்சரவையில் 21 தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தனர். மிக முக்கியமான அமைச்சரவை பொறுப்புகள் தமிழர்களுக்கு வழங்கப்பட்டது. 2004-ல் பிரதமர் நாற்காலி தேடிவந்த போதும் அதை மறுத்து மன்மோகன் சிங்குக்கு அளித்தவர் சோனியாகாந்தி.

வலிமை வாய்ந்த அரசியல் தலைவராக மாற வேண்டும் என்ற எண்ணம் இல்லாத மன்மோகன் சிங் 2 முறை பிரதமரானார். 100 நாள் வேலை, உணவு பாதுகாப்பு சட்டம், லோக்பால் சட்டங்களை மன்மோகன் சிங் கொண்டு வந்தார். சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை கொண்டுவந்தார்.

தாம்பரம் தேசிய சித்த மருத்துவ மையம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் மன்மோகன் சிங் காலத்தில் கொண்டு வரப்பட்டவை. தமிழ்நாட்டின் கனவுகளை மதிக்கக்கூடிய தலைவராக மன்மோகன் சிங் இருந்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னை எப்போது சந்தித்தாலும் உடல்நலம் குறித்து விசாரிப்பார்”

இவ்வாறு  தெரிவித்தார்.