ஈரோடு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.11.2025) ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஈரோடு, சித்தோடு, ஆவின் பால்பண்ணை வளாகத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவன் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-
நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக வருகை தந்துள்ள பெரியோர்களே, தாய்மார்களே,என்னுடைய பாசத்திற்கும், பேரன்பிற்கும் உரிய மகளிர் சுயஉதவிக் குழுவைச் சார்ந்திருக்கக்கூடிய அன்பிற்கினிய தாய்மார்களே, சகோதரிகளே,பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்த நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த மாபெரும் விழாவில், 91 கோடியே 9 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 23 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 235 கோடியே 73 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 790 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 1 இலட்சத்து 84 ஆயிரத்து 491 பேருக்கு, 278 கோடியே 62 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று, 605 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு இன்றைக்கு எனக்கு கிடைத்திருக்கிறது!

இந்த விழாவில், கலந்து கொள்ள என்னிடம் தேதி கேட்டபோது, “கடந்த ஆண்டு மார்ச் மற்றும் டிசம்பர் மாதங்களில், பொள்ளாச்சி மற்றும் ஈரோட்டில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் நான் அறிவித்த 12 அறிவிப்புகளின் ஸ்டேட்டஸ் – நிலை என்ன?” என்று நான் கேட்டேன். அதிகாரிகள் என்னிடம் பகிர்ந்து கொண்ட விவரங்கள், அறிவிப்புகள் எல்லாம் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக ஈரோடு மாநகராட்சியில், 106.78 கிலோமீட்டர் நீளத்துக்கு சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தோம். 79.83 கிலோமீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு எஞ்சியுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் டிசம்பர் 10-க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரைக்கும், இந்த விழாவிற்கு வந்தோம், அறிவித்தோம் என்று இருக்க மாட்டேன்! அத்தனை அறிவிப்பையும் செயல்படுத்திக் காட்டக்கூடிய அரசுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு. கடந்த நான்கு ஆண்டு காலத்தில் ஈரோடு மாவட்டத்துக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் செய்து தரப்பட்டுள்ள திட்டங்களைச் சொல்வதாக இருந்தால் அதற்கே ஏறக்குறைய 2 – 3 மணி நேரம் ஆகும். எனவே தலைப்புச் செய்தியாக சிலவற்றை மட்டும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

ஈரோடு மாநகராட்சி பேருந்து நிலையத்தை திறந்து வைத்திருக்கிறேன்.
ஜெயராமபுரத்தில், மாவீரன் பொல்லான் அவர்களுக்கு முழு திருவுருவச் சிலையுடன் அரங்கம் அமைத்து, அதை திறந்து வைத்துவிட்டுதான் இந்த மேடைக்கு நான் வந்திருக்கிறேன்.
ஈரோடு வட்டம், கங்காபுரம் கிராமத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. ·
குறுங்குழுமம் மேம்பாட்டுத் திட்டம் மூலம் ஈரோட்டில் மஞ்சள் பொது வசதி மையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ·
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் மேம்பாட்டு பணிகளுக்காக இதுவரை 8 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. ·
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த நான்கரை ஆண்டுகளில், 195 உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 177 பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
மீதமுள்ள 18 பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஈரோடு, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய 4 இடங்களில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு திட்டங்களின்கீழ், கடந்த நான்கரை ஆண்டுகளில், 944 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைப்பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. ·
17 ஊரகப் பாலங்கள், 73 நெடுஞ்சாலைப் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மண்டலத்தில், 400 திருக்கோயில்களில் 554 பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 150 திருக்கோயில்களில் 218 பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த நான்கரை ஆண்டு காலத்தில், 133 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.
சத்தியமங்கலம் பால் குளிரூட்டு நிலைய வளாகத்தில் கட்டு ஊறுகாய் புல் தயாரிக்கும் அலகு அமைக்கப்பட்டு வருகிறது.
கரட்டுப்பாளையத்தில் விடுதியுடன் கூடிய ஜிம்னாஸ்டிக் அரங்கம் கட்டும் பணி நிறைவுற்று, துவங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
நம்முடைய திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்களால் இந்த ஈரோடு மாவட்டத்தில் மட்டும் எத்தனை பேர் பயனடைந்திருக்கிறார்கள் தெரியுமா? நான் பெருமையோடு சொல்கிறேன்…
4 இலட்சத்து 9 ஆயிரத்து 354 குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
விடுபட்ட மீதமுள்ளவர்களுக்கும் கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் அதுவும் வழங்கப்பட இருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
59 ஆயிரத்து 262 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. ·
51 ஆயிரத்து 70 சுய உதவிகுழுக்களுக்கு 3 ஆயிரத்து 203 கோடி ரூபாய்க்கு கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது. ·
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், 8 இலட்சத்து 65 ஆயிரம் பேர் பயனடைந்திருக்கிறார்கள். ·
இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் 9 ஆயிரத்து 262 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. ·
5 ஆயிரத்து 865 பெண்கள் திருமண உதவி பெற்றிருக்கிறார்கள். ·
12 ஆயிரத்து 819 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டிருக்கிறது. ·
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தில், 12 ஆயிரத்து 819 தாய்மார்கள் பயனடைந்திருக்கிறார்கள்.
காலை உணவுத் திட்டத்தால், 53 ஆயிரத்து 716 மாணவர்கள் பசியில்லாமல் படிக்கிறார்கள். ·
புதுமைப் பெண் திட்டத்தில், 48 ஆயிரத்து 801 மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உயர்கல்வி உதவித்தொகை கிடைக்கிறது.
57 ஆயிரத்து 763 மாணவ மாணவியருக்கு மிதிவண்டிகள் தரப்பட்டிருக்கிறது. · 3 ஆயிரத்து 771 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிக் கருவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.
இது மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சிக்கான தேதி கேட்டு வந்தபோது நம்முடைய அமைச்சர் முத்துசாமி அவர்கள் அந்தப் பகுதியில் நிறைய பேருக்கு பட்டா பிரச்சினை இருக்கிறது என்று ஒரு கோரிக்கையுடன் வந்தார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்துக்குட்பட்ட 29 கிராமங்களில், சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர், நில ஒப்படை வழங்கப்பட்ட சுமார் 6000 ஏக்கர் பட்டா நிலங்களை, தமிழ்நிலம் பதிவேடுகளில் “நிபந்தனைக்குட்பட்ட பட்டா” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை நீக்கம் செய்து நிரந்தர பட்டாவாக மாற்ற அரசாணை வெளியிட்டுவிட்டு அந்த மனநிறைவோடு தான் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன். இதன் மூலம் சுமார் 2 ஆயிரத்து 680 நில உடமைதாரர்கள் பயனடையப் போகிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இன்னும் பெருமையுடன் சொல்கிறேன்… ஈரோட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 5 ஆயிரத்து 491 கோடி ரூபாய்க்கு 68 இலட்சத்து 85 ஆயிரத்து 232 பேருக்கு நலத்திட்ட உதவிகளும், 3 ஆயிரத்து 836 கோடி ரூபாயில், 19 ஆயிரத்து 488 வளர்ச்சி திட்டப்பணிகளும், 9 ஆயிரத்து 327 கோடி ரூபாய்க்கு செய்திருக்கிறோம். இத்தனை திட்டங்களை செய்திருக்கிறோம் என்ற பட்டியலிட்டு சொன்னாலும், இந்த நிகழ்ச்சியில் புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் இருக்க முடியுமா! வெளியிடாமல் சென்றால் இங்கே இருப்பவர்கள் என்னை சும்மா விட்டுவிடுவார்களா!
எனவே, இந்த ஈரோடு மாவட்டத்திற்கான ஆறு புதிய அறிவிப்புகளை இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் அறிவிக்க விரும்புகிறேன். பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு,

முதல் அறிவிப்பு
புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு, 4 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவிலும், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு, 4 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவிலும் புதிய நகராட்சி அலுவலக கட்டடங்கள் கட்டப்படும்.
இரண்டாவது அறிவிப்பு
பவானிசாகர் மற்றும் கீழ்பவானி நீர்ப்பாசனத் திட்டங்களின்கீழ், திட்ட நிபந்தனையுடன் வழங்கப்பட்ட பட்டாக்களை, நிரந்தர பட்டாவாக மாற்ற வேண்டும் என்ற சத்தியமங்கலம், நம்பியூர், பவானி, கோபிசெட்டிபாளையம், மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை மற்றும் ஈரோடு ஆகிய வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கைய ஏற்று, இந்த 90 கிராமங்களில் உள்ள, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பட்டாக்கள், நிரந்தரப் பட்டாவாக மாற்றப்படும்.
மூன்றாவது அறிவிப்பு
அந்தியூர் அருகேயுள்ள தோனிமடுவுப் பள்ளத்தின் குறுக்கே 4 கோடி ரூபாய் செலவில் புதிய தடுப்பணை அமைக்கப்படும்!
நான்காவது அறிவிப்பு
சாயப்பட்டறைக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக உள்ள பல்வேறு வழக்குகள் மற்றும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்து ஆராய, வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு
பெருந்துறையில் தற்போதுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு 5 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடம் கட்டித் தரப்படும்.
ஆறாவது அறிவிப்பு
அந்தியூர் மற்றும் எண்ணமங்கலம் வருவாய் கிராமங்களில் உள்ள நிலங்களுக்கான பதிவேடுகளில் உள்ள நிபந்தனை பட்டாக்கள் அயன் பட்டாக்களாக மாற்றப்படும்.
இவ்வாறு பேசினார்.