சென்னை: தேவர் ஜெயந்தியையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். அங்கு தேவர் பெருமகனார் சிலைக்கு மரியாதை செய்கிறார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கி 30ஆம்தேதி வரை அரசு விழாவாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் வரும் அக்.30 ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி விழா, குருபூஜை விழா நடைபெற உள்ளது. தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையில் கலந்துகொள்ள தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பசும்பொன் செல்வது வழக்கம்.
இந்த விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் என சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொள்ள உள்ளதால், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்பட தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அக.30 ஆம் தேதி அன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் முதல்வர் ஸ்டாலின் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். அதைத்தொடர்ந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்கிறார்.