சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அடையாறு மண்டலத்தில் ரூ.5.84கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் போது சென்னை வெள்ளத்தில் தத்தளித்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது. இதை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த பருவமழைக்குள் மழை நீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு சரி செய்யப்படும் என கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து, சென்னையில் மழை நீர் தேங்கும் பகுதிகளாக சுமார் 400 இடங்கள் கண்டறியப்பட்டு, அதை சரி செய்யும் வகையில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு ரூ. 310 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் நடைபெறும் பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். ஏற்கனவே   சென்னை ஆழ்வார்பேட்டை செனடாப் சாலை மூப்பனார் பாலம் அருகே சுமார் 2.14 கோடி மதிப்பீட்டில், 870 மீட்டர் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை   மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்தார். அதுபோல வடசென்னை பகுதிகளில் நடைபெறும் பணிகளையும் பார்வையிட்டார்.

இந்த நிலையில், இன்று அடையாறு மண்டலத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி மேயர், ஆணையர் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட  அடையாறு மண்டலத்தில் ரூ.5.84  கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்  ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை சீரமைத்திட 5 கோடியே 84 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி, போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பணிகளும் விரைவாக நடைபெற்றன. வரும் பருவமழை காலங்களில் மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள சிங்காரச் சென்னை 2.0 திட்டம், உலக வங்கி நிதி மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து திட்டப் பணிகளை உடனடியாக தொடங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 17.03.2022 அன்று இராயபுரம், திரு.வி.க. நகர் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், 23.03.2022 அன்று தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட சித்தரஞ்சன் சாலை மற்றும் செனடாப் சாலை பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வேளச்சேரி பிரதான சாலையில் 2 கோடியே 22 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 915 மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், காந்தி தெரு, சீதாபதி நகர் 2வது குறுக்கு தெருவில் 3 கோடியே 62 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1500 மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வருகின்ற பருவமழை காலத்தில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அலுவலர்களுக்கு  உத்தரவிட்டார்.