சென்னை: தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, பெருநிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு தொழிற்சாலைகள் உருவாக்கி வருகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் இலக்கு நிா்ணயித்துள்ளாா்.
அதன்படி, ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இருநாள் மாநாடு நடைபெற்றது. அப்போது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளில் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இருநாள் நடைபெற்ற மாநாட்டின் முடிவில், முன்னெப்போதும் இல்லாத அளவாக 6 லட்சத்து 64 ஆயிரம்180 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், இன்று 2வது முறையாக சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலான லீலா பேலஸில், தமிழக முதலீட்டாளர் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டின் போது முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் செம்கார்ப் உள்ளிட்ட 47 நிறுவனங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவும் நாளை நடைபெற உள்ளது. அதோடு 28 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.