சென்னை: சென்னை மக்கள் குடிநீர் தேவைக்காக நெம்மேலியில் ரூ.2,465 கோடியில் அமைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் ரூ.1,802 கோடி மதிப்பீட்டிலான 39 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 1516 கோடியே 82 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை திறந்து வைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடி நீராக்கும் நிலையம் உள்ளிட்ட 2465 கோடி ரூபாய் செலவிலான 96 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, 1802.36 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 39 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் ஏற்கனவே கடல்நீரை குடிநீராக்கும் ஆலை செய்யப்பட்டு வந்த நிலையில், 2வது ஆலை அமைக்க திமுகஅரசு அடிக்கல் நாட்டியது. அதனப்டி, தென்சென்னையின் சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் 9 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் நாள்தோறும் 15 கோடி லிட்டர் நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் நெம்மேலியில் ரூ.2,465 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்பட்டு வந்தது. இந்த ஆலையின் பணிகள் முடிவடைந்து செயல்பாட்டு வந்துள்ள நிலையில், நெம்மேலை கடல்நீர் குடியாருக்கும் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் ரூ.1,802 கோடி மதிப்பீட்டிலான 39 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இன்று நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திறக்கப்பட்டுள்ளது என்றவர், எனது இதயத்திற்கு நெருக்கமான திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் என கூறினார். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அமைச்சர் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தவர், அமைச்சர் நேரு எதையும் நேர்த்தியாக பிரமாண்டமாக செய்யக்கூடியவர், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. என புகழாரம் சூட்டினார்.
நாம் செயல்படுத்திய திட்டங்களை பட்டியல் போட்டால், இன்று ஒரு நாள் போதாது. நிதி நெருக்கடியிலும், குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் வடசென்னை மக்கள் பயன்பெறுகின்றனர். தற்போது திறக்கப்பட்டுள்ள நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தென்சென்னை மக்கள் பயன்பெறுவார்கள் என்றவர், கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மூலம் தென் சென்னையில் 9 லட்சம் மக்கள் பயன்பெறுவர் என்று சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்த பேசியவர், சீர்மிகு சென்னையை உருவாக்கியதில் திமுகவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. சென்னையில் மேம்பாலம் உள்ளிட்ட பல கட்டமைப்புகள் திமுக ஆட்சியில்தான் உருவானது. * சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெற்று அறிவிப்புகளை வெளியிடும் அரசு திமுக அரசு கிடையாது என்றும் கூறினார்.