கோவை: கோவை கணியூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழுவுருவ வெண்கலச் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் (ஆக. 9) திறந்துவைத்தார். தொடர்ந்து கொடிக்கம்பம், நூலகத்தையும் திறந்து வைத்தார்.
தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடக்கம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வெறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நேற்று முற்பகல், கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவை அரசுக் கல்லூரியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலமாக, அரசுப் பள்ளிகளில் பயின்று உயா் கல்வியில் சேரும் 3.28 லட்சம் மாணவா்கள் பயன் பெற உள்ளனர். அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களின் உயா் கல்விச் சோ்க்கையை அதிகரிக்க இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கோவையில் உக்கடம் – ஆத்துப்பாலம் இடையேயான மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தார். ரூ. 481 கோடி மதிப்பீட்டில், 3.8 கி.மீ நீளத்திற்கு இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
இதன்பின்னர் கணியூர் வந்த முதல்வர் ஸ்டாலின், அங்கு நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்துவைத்தார். 8 அடி உயரத்தில் கருணாநிதியின் முழுவுருவ வெண்கலச் சிலையை திறந்துவைத்த முதல்வர், அறிவுசார் நூலகம், 106 அடி உயர திமுக கொடிக்கம்பத்தையும் திறந்துவைத்தார்.