கரூர்: கரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின் இன்று விவசாய பெருமக்களுடன் கலந்துரையாடினார். அதைத்தொடர்ந்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேரூரை ஆற்றினார்.
அரசு முறை பயணமாக நேற்று மாலை திருச்சி வரை விமானத்தில் சென்ற முதல்வர் கரூருக்கு சாலை மார்க்கமாக பயணம் செய்தார். அப்போது, கரூருக்கு செல்லும் வழியில் கருணாநிதியின் நண்பர் குடும்பத்தினர் சாலையில் தன்னை வரவேற்க நிற்பதை கண்டு வேனை நிறுத்தி நலம் விசாரித்துவிட்டுச் சென்றார். அதைத் தொடர்ந்து நேற்று மாலை தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தொழில் வாய்ப்புகள் முதலீடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், கரூரில், ஜவுளித் தொழில், கொசுவலை உற்பத்தி, கயிறு உற்பத்தி, வர்த்தகம் மற்றும் உணவு தானியங்கள் உற்பத்தி, வாகனங்களுக்கான கூண்டு கட்டும் தொழில் ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து, இன்று காலை கரூரில், விவசாய பெருமக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தினார். அதையடுத்து கரூர் திருமாநிலையூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அந்த நிகழ்ச்சியில், 80,750 பேருக்கு ரூ.500 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், ரூ.518.44 கோடியில் 99 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.28.60 கோடியில் முடிவுற்ற 95 பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேரூரை ஆற்றி வருகிறார்.
விழாவில், மாநில மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், மேயர் கவிதா, எம்எல்ஏக்கள் குளித்தலை ரா.மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் க.சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து நாளை நாமக்கல்லில் நடைபெறும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டிலும் முதல்வர் பங்கேற்க உள்ளார்.