சென்னை: தமிழ்நாட்டின் அனைத்து 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்களை  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, அம்மையங்களுக்கான நவீன மேசை கணினிகள் வழங்கிடும் அடையாளமாக 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நவீன மேசை கணினிகளையும், பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் முதலமைச்சரும், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலினிடம், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தை தொடங்கிடும் வகையில் மேசை கணினி, பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லை (User ID and Password) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

பொதுமக்கள் முக்கிய சான்றிதழ்களை எம்எல்ஏ அலுவலகத்தில் பெறும் வகையில்  அனைத்து தொகுதி எம்எல்ஏ அலுவலகங்களிலும் இசேவை மையம்  தொடங்கப் பட்டுள்ளது.  இ-சேவை மையங்களுக்கு நவீன மேசை, கணினிகள் வழங்கிடும் அடையாளமாக 10 எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறையில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த இ-சேவை மையம் மூலம்  பொதுமக்கள் வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவை  பெற முடியும். இதுவரை அரசு அலுவலகங்களில் அமைந்திருக்கும் இசேவை மையங்களை நாட வேண்டி  இருந்த நிலையில், தற்போது, பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில்,   தமிழகக்கத்தில் உள்ள அனைத்து தொகுதி எம்எல்ஏ அலுவலகங்களிலும் இசேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களிலும் கணினி இன்று வழங்கப் பட்டுள்ளது.

இதற்கென 10 வெவ்வேறு கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் தலைமை செயலகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கணினிகளை வழங்கினார்.