சென்னை: திராவிட மாடல் ஆட்சி 2.0  காலமான  அடுத்த 5 ஆண்டுகள்  தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சரின் பதிலுரையை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சரின் பதிலுரையை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.

ஆளுநர் உரைக்கு பதிலுரை அளிக்க வேண்டிய நான் இன்று ஆளுநருக்கு விளக்கமளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்று கூறிய முதல்வர்,  தமிழ்நாட்டில் திமுக ஆட்சி 5 ஆண்டுகள் கடந்த நிலையில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இந்தியாவின் மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை உயர்ந்து பார்க்கிறார்கள். இவையெல்லாம் தான் என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணமாக உள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை கொடுக்கும் நிகழ்வில் பேசிய அவர், “2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 6வது முறையாக வெற்றிப் பெற்றது. ஒரு பக்கம் எனக்கு மகிழ்ச்சி இருந்தாலும், மறுபக்கம் கவலை இருந்தது. இதனை நான் மறைக்க விரும்பவில்லை.

இந்த பொறுப்பை எப்படி செய்யப்போகிறேன், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா, மக்கள் விரும்பும் வகையில், மகிழ்ச்சியடையும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா என்ற கவலை எனக்கு இருந்தது.

முந்தைய 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும், அனைத்து வகையிலும் மிக மோசமான பின்னடைவை சந்தித்திருந்தது. அதனை சரி செய்வது, அதனையடுத்து மத்திய அரசு ஒத்துழைக்காத ஓரவஞ்சனை அரசாக இருந்தது. இந்த 2 நெருக்கடிகளையும் எதிர்கொள்வது தான் எனக்கு கவலைக்கு காரணமாக அமைந்தது. இடியாப்ப சிக்கல் என்ற நிலையில் தான் ஆட்சிக்கு வந்தோம்.

ஆனால் 5 ஆண்டுகள் கடந்த நிலையில் நான் இப்போது சொல்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்னும் சொன்னால் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதற்கு காரணம் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். என்னுடைய இலக்கில் நான் வெற்றி பெற்று விட்டேன். திராவிட மாடல் அரசின் சாதனை களால் தமிழ்நாடு தலை நிமிர்ந்து விட்டது. மக்கள் மனநிறைவு அடையக்கூடிய வகையில் ஆட்சி வழங்குகிறோம்.

இன்றைக்கு தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட அதிகம் வளர்ந்துள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை புருவம் உயர்த்தி பார்க்கிறார்கள். இவையெல்லாம் தான் என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணமாக உள்ளது.

அடுத்ததாக இன்னும் பெருமையோடும், தன்னம்பிக்கையோடும் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். அடுத்து நாங்கள் அமைக்கவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சி எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவுக்கு இருக்கும். இந்த 5 ஆண்டுகள் வரப்போகும் ஒளிமயமான எதிர்காலத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. கோடிக்கணக்கான மக்களின் மனதிலும், முகத்திலும் மனநிறைவான மகிழ்ச்சியை நான் பார்க்கிறேன்”  என்றார்.

மேலும், “ஆளுநர் உரைக்கு பதிலுரை அளிக்க வேண்டிய நான் இன்று ஆளுநருக்கு விளக்கமளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். சோதனைகள் எனக்கு புதிதல்ல, சோதனைகளை வென்று வளர்ந்தவன் நான். அவர்கள் உள்ளுக்குள் மகிழ்ச்சி அடையலாம், ஆனால் சோதனைகள் என்னை எதுவும் செய்யாது. தேசபக்தி குறித்து யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். எங்களுக்கு பாடம் எடுக்கும் அளவுக்கு அவர்கள் இந்த தேசத்திற்கு எதுவும் செய்யவில்லை.

ஆளுநர் கேள்வி கேட்க வேண்டும் என்றால் மத்திய அரசைத்தான் கேட்க வேண்டும். ஒரே காரணத்தைத் திரும்ப திரும்பச் சொல்லி உரையை வாசிக்காமல் தவிர்த்து வருகிறார் ஆளுநர். ஆளுநர் தனது உரையை படிக்காமல் உள்ளது வேடிக்கையாக உள்ளது. இது மக்களாட்சிக்கு விடுக்கப்பட்ட சவால்.

தமிழ்நாடு அனைத்து வகையில் முன்னேறிய மாநிலமாக இருந்து வருகிறது” என்று கூறி திமுக அரசில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து பேசினார்.

[youtube-feed feed=1]