சென்னை: பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதற்கு உமா குமரன் நன்றி தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் தொழிற்கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ளது. அங்கு வாழும் ஈழத்தமிழர்களும் புலம்பெயர் தமிழ் சமூகமும் மகிழ்வடையும் வகையில் தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழத்தமிழ் பெண்ணான உமா குமரன் (Uma Kumaran) ஸ்ராட்போட் அன்ட் பௌவ் தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெர்வாகியுள்ளார். உமா குமரன் தன்னுடன் போட்டியிட்ட வேட்பாளர்களை விட பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு 19,145 வாக்குகள் கிட்டியுள்ளன. இது அந்த தொகுதியில் கிட்டிய வாக்குகளில் 44.1 வீதமாகும்.
இலங்கையின் ஆயுதப் போரின் காரணமாக புலம் பெயர்ந்து இங்கிலாந்தில் குடியேறிய தம்பதிக்கு, கிழக்கு லண்டனில் பிறந்தவர் உமா குமரன். குயின் மேரியில் தனது கல்வியை தொடர்ந்த அவர், ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவ் பகுதியில் வசித்து வருகிறார். தற்போதைய லண்டன் மேயர் சாதிக் கானுக்காகவும், மிக சமீபத்தில் உலகளாவிய காலநிலை அமைப்பின் ராஜதந்திர உறவுகளின் இயக்குநராகவும் உமா குமரன் பணியாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை, விஞ்ஞானிகள் மற்றும் காலநிலை தலைவர்களுடன் இணைந்து உலகெங்கிலும் உள்ள துணிச்சலான காலநிலை நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழர்களுக்குத் தாங்கள் மிகப் பெரும் பெருமையைத் தேடித் தந்துள்ளீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “பிரிட்டனின் ‘ஸ்ட்ராட்ஃபோர்ட் அண் போ’ நாடாளுமன்றத் தொகுதியின் முதல் உறுப்பினரும், பிரிட்டானிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள முதல் தமிழ்ப் பெண்மணியுமாகிய உமா குமரனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தமிழர்களுக்குத் தாங்கள் மிகப்பெரும் பெருமையைத் தேடித் தந்துள்ளீர்கள்!” என்று முதல்வர் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள உமாகுமாரன், ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது எனது வாழ்க்கையின் பெருமை. என் மீதும், தொழிலாளர் கட்சி மீதும் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.