சென்னை: தேசத்துக்கான 33 ஆண்டுகள் சேவையாற்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளபார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், முன்னாள் பிரதமராகவும் பணியாற்றிய மன்மோகன் சிங்கின், தற்போதைய மாநிலங்களவை பதவி நிறைவு பெறுகிறது. அவர், சுமார் 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த நிலையில், அவருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. இதையொட்டி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “33 ஆண்டுகளாக மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினராக தேசத்திற்கு நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் எனது சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் பதவிக் காலம் முழுவதும், பணிவு, புத்திசாலித்தனம் மற்றும் அரசியற் திறன் ஆகியவற்றின் அரிய கலவையை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள். அரசியல் ஸ்பெக்ட்ரம் முழுவதும் மரியாதை மற்றும் பாராட்டைப் பெற்றீர்கள். உங்கள் தலைமைத்துவம், குறிப்பாக சவாலான காலங்களில், நான் உட்பட பலருக்கு உத்வேகம் அளித்தது.
உங்கள் வாழ்க்கையின் புதிய கட்டத்திற்கு நீங்கள் மாறும்போது, இந்திய யூனியனுக்கும் அதன் மக்களுக்கும் உங்கள் மகத்தான பங்களிப்பில் நீங்கள் பெருமிதம் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
திமுக சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும், உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் நிறைவாக இருக்க வாழ்த்துகிறேன். உங்கள் ஞானம் மற்றும் தொலைநோக்கு மூலம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்” என குறிப்பிட்டிருந்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவரும் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இவர், கடந்த 1991ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 முதல் தற்போது வரை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு சென்ற அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.