சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் குகேஷ்-க்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இள வீரரான குகேஷ் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் கலந்துகொண்டு, வெற்றி பெற்று மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். செஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத யாரும் கண்டிராத சாதனையை இவர் படைத்துள்ளார். ஆம் தனது இளம் வயதிலேயே உலக சாம்பியனானதன் மூலம் மொத்தம் $1.35 மில்லியன் அதாவது இந்திய ரூபாயில் ரூ. 11.34 கோடி வென்றுள்ளார்.
ஏற்கனவே தமிழக வீரர் ஆனந்த் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்ற நிலையில், இரண்டாவதாகவும் தமிழக வீரர் குகேஷ் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீரர் குகேஷை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு ரூ.5 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 இன் 14வது ஆட்டத்தில் சீனாவை சேர்ந்த டிங் லிரனை வீழ்த்தி , செஸ் வரலாற்றில் இளைய உலக சாம்பியனாக மாறி, 8 வயதில், குகேஷ் செஸ் போட்டிகளில் உலகப் பட்டத்தை வென்ற முதல் இளைஞர் என்ற பெருமையுடன் உலக செஸ் வரலாறு மட்டுமின்றி இந்திய வரலாற்றிலும் புதிய வரலாற்றை எழுதி உள்ளார்.
இந்த போட்டியில் 13 ஆட்டங்களுக்குப் பிறகு, 2024 உலக செஸ் சாம்பியன்ஷிப் 6.5-6.5 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. FIDE விதிகளின்படி, செஸ் உலகப் பட்டத்தை வெல்ல ஒரு வீரர் 7.5 புள்ளிகளைப் பெற வேண்டும். இல்லையெனில் சாம்பியன்ஷிப் டைபிரேக்கர்களில் முடிவு செய்யப்பட்டிருக்கும்.
குகேஷ் மற்றும் டிங் இருவரும் வெற்றிக்கு ஒரு புள்ளி தொலைவில் இருந்த நிலையில், இறுதி ஆட்டம் 14 மெய்நிகர் நாக் அவுட் ஆனது.
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் ஒவ்வொரு வெற்றியும் 1 புள்ளியும், டிரா 0.5 புள்ளிகளையும் கொண்டிருந்தது. 14வது ஆட்டத்தில் வெள்ளைக் காய்களுடன் விளையாடியதால் டி குகேஷுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் இரு வீரர்களும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டத் தவறியதால், போட்டி சமநிலையை நோக்கிச் சென்றது. அதற்குள் சீன கிராண்ட்மாஸ்டர் தடுமாறிய நிலையில், குகேஷ் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தார்.
இந்த சாம்பியன்ஷிப்பில் குகேஷின் மூன்றாவது வெற்றி இதுவாகும். மறுபுறம் டிங் இரண்டு ஆட்டங்களை வென்றார். மீதமுள்ள ஒன்பது ஆட்டங்கள் டிராவில் முடிந்தது.
2024 உலக செஸ் சாம்பியன்ஷிப் மொத்தம் $2.5 மில்லியன் பரிசுத் தொகையைக் கொண்டுள்ளது. FIDE விதிகளின்படி , ஒவ்வொரு வெற்றிக்கும் ஒரு வீரருக்கு $200,000 அதாவது ரூ. 1.68 கோடி வழங்கப்படும். மீதமுள்ள பரிசுத் தொகை சமமாகப் பிரிக்கப்படும்.
குகேஷ் மூன்று ஆட்டங்களில் 3, 11 மற்றும் 14 ஆட்டங்களில் வென்றார். இந்த வெற்றிகளின் மூலம் $600,000 அதாவது ரூ. 5.04 கோடி சம்பாதித்துள்ளார். அதே நேரத்தில் 1 மற்றும் 12 ஆட்டங்களை வென்றபிறகு டிங் $400,000 ரூ. 3.36 கோடி சம்பாதித்தார். மீதமுள்ள $1.5 மில்லியன் இரண்டு வீரர்களுக்கும் சமமாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படும்.
ஒட்டு மொத்தமாக, குகேஷ் $1.35 மில்லியன் அதாவது ரூ.11.34 கோடி பரிசுத்தொகையை வென்றார்.
அதேபோல், டிங் $1.15 மில்லியன் பரிசுத்தொகையை ரூ.9.66 கோடி வென்றார்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடி பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.