சென்னை : விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 31-ம் தேதிக்குள் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என்றும், பயிர் காப்பீடு செய்ய ஏக்கருக்கு பிரீமியம் தொகையாக ரூ.721.24 விவசாயிகள் செலுத்தவேண்டும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சம்பா தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குறுவையில் 5 லட்சம் ஏக்கர், சம்பா தாளடியில் 9 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். விவசாயிகள் சாகுபடி செய்யும் போது இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு மகசூல் ஏற்பட்டு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதை ஈடுகட்ட மத்திய மாநில அரசுகள் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன, இந்த பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் பங்காளிப்புடன் விவசாயிகளும் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை பிரிமியம் செலுத்துகின்றன. திட்டம் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. டெல்டாவில் குறுவை சாகுபடி அறுவடையின்போது பெரும்பாலும் மழைக்காலமாக இருப்பதால் பெருமளவு இழப்பீடு வழங்க வேண்டி இருந்ததால் கடந்த 3 ஆண்டுகளாக தனியார் காப்பீடு நிறுவனங்கள் காப்பீடு வழங்க முன்வரவில்லை.
அதே நேரத்தில் சம்பா தாளடி பயிர் காப்பீடு திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லாமல் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் முன்வரவில்லை என்றால் அரசே திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆண்டில் இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பயிா் இழப்பிலிருந்து பாதுகாத்திட ரூ.1,775 கோடி ஒதுக்கீட்டில் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறுவை பருவம் உள்பட சம்பா மற்றும் கோடை பருவங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். வரும் 24 ஆம் தேதி முதல் குறுவை பருவத்துக்கான விவசாயிகள் பதிவு, தேசிய பயிா் காப்பீட்டு இணையதளத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.