சென்னை: கரூரில் சாலை போடாமலே கோடிக்கணக்கில் பணம் கையாடல் விவகாரத்தில் முதலமைச்சருடன் கூட்டுக் கொள்ளையோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது என்று அம்மா மக்கள் கட்சி தலைவர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
கரூரில் நடைபெறும் ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், சாலை போடாமலேயே ரூ 5 கோடி சங்கர் ஆனந்த் இன்ஃப்ரா என்னும் ஒப்பந்ததாரருக்கு கரூர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மார்ச் 2022-ல் பணம் கொடுத்து ஊழல் நடந்துள்ளது என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதன் மீது FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் ஏப்ரல் 20 புகார் அளித்தது. தற்பொழுது கூடுதல் முக்கிய ஆதாரங்களை சமர்பித்துள்ளது. 6 மாதங்கள் ஆகியும் இதுவரை FIR கூட பதிவு செய்யப்படவில்லை.
இதுதொடர்பாக இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூரில் சாலை போடாமலேயே தி.மு.க ஆட்சியில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் வெளியாகியிருக்கும் புதிய ஆதாரங்கள் குறித்து, முதலமைச்சர் திரு.ஸ்டாலினும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும் உரிய விளக்கம் அளிப்பார்களா? இந்த முறைகேட்டிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களைக் காப்பாற்ற முயற்சிப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள், இது ஒரு கூட்டுக் கொள்ளையோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனத்திற்கே 100கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பது தி.மு.க ஆட்சியில் எந்த அளவிற்கு ஊழல் மலிந்து போயிருக்கிறது என்பதற்கு சாட்சியாக அமைந்திருக்கிறது. ‘சர்க்காரியா புகழ்’ தி.மு.க.வினர் கரூரில் சாலை போடாமலேயே மக்கள் பணத்தை சுரண்டியதைப் போல இன்னும் என்னென்ன திருவிளையாடல்களை அரங்கேற்றுகிறார்களோ?! ” என்று குறிப்பிட்டுள்ளார்.