சென்னை: கடலூர் துறைமுகத்தை தனியாருக்கு 35 ஆண்டுகளுக்கு குத்தகை விடும் வகையில், தனியார் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைழுத்தாகி உள்ளது.
கடலூர் துறைமுகத்தை 35 ஆண்டுகளுக்கு இயக்குவதற்காக தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் சார்பாக கடலூர் துறைமுகம் மஹதி என்ற கடல்சார் தனியார் லிமிடெட் நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்டள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கையெழுத்திட்டார்.

ஏற்கனவே கடலூர் துறைமுகத்தை 50ஆண்டுகளுக்கு குத்தகை என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்க்க தமிழ்நாடு அரசு கடந்த 2024ம் முடிவு செய்த நிலையில், தற்போது 35 ஆண்டுகள் பயன்படுத்தும் வகையில் தனியார் நிறுவனத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான துறைமுகங்களில் கடலூர் துறைமுகமும் ஒன்று. கடலூர் துறைமுகம், வங்காள விரிகுடாவில் உப்பனாறு மற்றும் பரவனாறு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள ஒரு இடைநிலை நங்கூரத் துறைமுகமாகும். ஆனால், தொடர்ச்சியான வண்டல் மண் படிவு, அதை அகற்றுவதில் அரசு காட்டி வந்த மெத்தனம் காரணமாக துறைமுகம் செயலிழந்து போனது.
இருப்பினும், வடக்கு மற்றும் தெற்கு பிரேக்வாட்டரை நீட்டித்தல், 1 & 2 (240 மீ நீளம்) துறைமுகக் கப்பல்கள் கட்டுதல் மற்றும் அணுகு வாய்க்காலில் சுமார் 9 மீட்டர் தூர்வாருதல் ஆகியவற்றிற்காக தமிழ்நாடு கடல்சார் வாரியம் (TNMB) ₹160 கோடி செலவிட்டது.
இதைத்தொடர்ந்து, அரசாங்கம் இந்த துறைமுகத்தை மேலும், ஆழமான நீர், நேரடி நிறுத்துமிடம் மற்றும் அனைத்து வானிலை துறைமுகமாகவும் மேம்படுத்த விரும்புகிறது, இதனால் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கப்பல்கள் மற்றும் கடலோர கப்பல்கள் கையாள முடியும். தற்போது, துறைமுகத்தில், 0.5 கடல் மைல் தொலைவில் 8-10 மீ ஆழத்தில் கப்பல்கள் நங்கூரமிடும் நிலை உள்ளது. அதனால் கப்பல்களில் உள்ள சரக்குகள் படகுகள் வழியாக கையாள வேண்டிய நிலை கிடைக்கிறது அதனால் துறைமுகம் ஆழப்படுத்தப்பட்டால், கப்பல்கள் கரைப்பகுதிக்கு வரவும், அதன்மூலம் போக்குவரத்து எளிதாகவும் இருக்கும் என நம்பப்படுகிறது.
இதனால், துறைமுகத்தை அகலப்படுத்தி, ஆழப்படுத்த அரசு திட்டமிட்டது. அதன்படி, 111.72 ஏக்கர் பரப்பளவுள்ள திட்ட வசதிகளை நிலத்துடன் சேர்த்துப் பயன்படுத்த தனியார் நிறுவனத்துக்கு, 99 ஆண்டு காலம் குத்தகைக்கு விட தீர்மானிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பின்னர் 50 ஆண்டு காலம் என கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது 35 ஆண்டு காலம் கடலூர் துறைமுகத்தை இயக்க தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டளள்து.
இந்த ஒப்பந்தம் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட துறைமுக மேம்பாட்டாளர், துறைமுகத்தின் ஆதரவு உள்கட்டமைப்புகளை உருவாக்கி, அதன் மேம்பாடு, சந்தைப்படுத்தல், செயல்பாடு மற்றும் பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட துறைமுக மேம்பாட்டாளருக்கு தெற்கு அலைத் தடத்திலிருந்து 3.60 கி.மீ நீளமுள்ள கடற்கரையை 35 ஆண்டுகளுக்குப் பயன்படுத்த உரிமம் வழங்கப்படுகிறது.
இது பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் 99 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். 3.60 கி.மீ நீளமுள்ள கடற்கரையை ஒட்டிய 47.14 ஏக்கர் பரப்பளவுள்ள அரசாங்கப் புறம்போக்கு நிலமும் (பயிரிட முடியாத நிலம்) சலுகையின் ஒரு பகுதியாக வழங்கப்படும்.
கடலூர் துறைமுகம் முறையாக பராமரிக்கப்பட்டு, செயல்பட்டு வந்தால் மேட்டூர், கடலூர் ஆகிய இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கும், மத்திய மற்றும் மேற்கு தமிழ்நாட்டில் உள்ள இணை மின் உற்பத்தி நிலையங்களைக் கொண்ட பிற உற்பத்தித் தொழில்களுக்கும் நிலக்கரி இறக்குமதி துறைமுகத்திற்கு நல் வாய்ப்பாக இருக்கும் என நம்பப்படகிறது. தற்போது நிலக்கரி கையாளப்படும் எண்ணூர் துறைமுகத்திலிருந்து மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கான ரயில் தூரம் சுமார் 400 கி.மீ உள்ள நிலையில், இது சுமார் 100 கி.மீட்டருக்குள்ளே இருப்பதால், பயண செலவு உள்பட அனைத்து செலவுகளும் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்பபடுகிறது.
கடலூர் துறைமுகம் தமிழ்நாட்டின் வட மத்திய கடற்கரைப் பகுதிக்கு மூலோபாய ரீதியாக நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த துறைமுகம் வட மத்திய தமிழ்நாட்டிற்கு ஒரு மாற்று நுழைவாயிலாக இருக்க முடியும், மேலும் கடலூர் துறைமுகம் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு குறைந்த நேரம் மற்றும் செலவில் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.