சென்னை:
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், டில்லியைத் தொடர்ந்து சென்னையில் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே டில்லி ஜந்தர் மந்திரில் 41 நாள்களுக்கு போராட்டம் நடத்தினர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த உறுதியின் பேரில் அவர்களது போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
ஆனால், உறுதியளித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், தற்போது சென்னையில் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
இன்று முதல் மெரினா கடற்கரையில் போராட்டத்தை தொடர உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து மெரினாவில், காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார் அய்யாக்கண்ணு. அப்போது தங்களது கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்.
இதையடுத்து கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை ஒரு மாதத்தில் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்திருக்கிறார். மற்ற கோரிக்கைகளை இரு மாதங்களில் நிறைவேற்றுவதாக தெரிவித்திருக்கிறார்.
இதை செய்தியாளர்களிடம் தெரிவித்த அய்யாக்கண்ணு, இந்த கோரிக்கைகளை தமிழக அரசு குறித்த காலத்தில் நிறைவேற்றாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து தற்போதைய போராட்டம் ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது