சென்னை: 15 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது. மீனவர்கள் கைதை கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நேற்று ஒருநாள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், , தமிழ்நாட்டைச் சேர்ந்த15 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 5.11.2022 அன்று கைது செய்யப்பட்டது குறித்தும், அவர்களது 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்தும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், பாக் நீரிணை பகுதியில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தடையின்றி தொடர்கிறது. இது பாரம்பரிய மீன்பிடி பகுதியை வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது. உடனடி விடுதலை கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய, தூதரக வழிமுறைகள் மூலமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடி படகுகளை விடுவிக்க நீங்கள் உதவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.