நாகை: 2 நாள் பயணமாக திருவாரூர் மாவட்டம் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருக்குவளையில் உள்ள தனது தந்தை கருணாநிதியின் பூர்விக  இல்லத்தில் தனது குடும்பத்தோடு மரியாதை செலுத்தினார்.

திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டு வந்த, ஒருங்கிணைந்த பேறுகால அவரச சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். அத்துடன் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, நாகை மாவட்டம் திருக்குவளைக்கு மகன், மருமகள், மகன் மருமகள் மற்றும்  பேரப்பிள்ளைகள் உள்பட குடும்பத்தோடு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள மறைந்த கலைஞர் கருணாதியின் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினார்.

முதல்வராக பதவி ஏற்றபிறகு முதன்முறையாக திருக்குவளைக்கு குடும்பத்தோடு சென்ற ஸ்டாலினுக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து, அங்குள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்றவர்கள், அங்குள்ள முத்துவேலர், அஞ்சுகம் அம்மையார், கலைஞர் மற்றும் முரசொலிமாறன் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அங்கு வைக்கப்பட்டுள்ள கலைஞரின் புகைப்பட தொகுப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

இதை தொடர்ந்து கலைஞர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார். அதில், பதவி என்பது பொறுப்பு; பொறுப்போடு எப்போதும் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று கலைஞர் அடிக்கடி கூறுவதை மனதில் வைத்து ‘பதவியை பொறுப்பு என தனது மனதில் ஏற்று தன் பயணம் தொடரும்’ என்று உறுதிமொழி ஏற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர், திருக்குவளையில் இருந்து புறப்பட்டு சென்றார்.

பின்னர் மாலை, நாகை மாவட்டம் சீராவட்டம் பகுதியில் வெண்ணாற்றில் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் சீரமைப்பு பணிகளை அவர் பார்வையிட்டார்.