சென்னை: மதுரை மாவட்டத்தில் நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை செல்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அக்டோபர் 2ந்தேதி காந்தி பிறந்தநாளையொட்டி, தமிழ்நாட்டில், ஊரக ஊராட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களைத்தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராம சபை கூட்டத்தை நடத்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை புறப்பட்டு செல்கிறர். முதல்வராக பதவி ஏற்றபிறகு 2வது முறையாக மதுரை செல்லும் முதலமைச்சருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.