சென்னை: விவசாய மின்இணைப்பு பெற்ற 1லட்சம் விவசாயிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் இலவச மின்சாரம் வேண்டி விண்ணப்பம் செய்த விவசாயிகளுக்கு உடனே மின்சாரம் வழக்க ஆணையிடப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக ஒரு லட்சம் விவசாயிகளுக்க இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் 2021 செப்டம்பர் 23-ல் தொடங்கி வைக்கப்பட்டது.
அதன்படி, ஒரு லட்சம் விவசாய மின்இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். சென்னையில் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் விவசாயிகளிடம் பேசினார். ஒரு லட்சம் மின்இணைப்பு திட்டத்தில் கடைசி 100 பேருக்கு மின்இணைப்பு ஆணைகளை வழங்கி முதல்வர் பேசினார்.
வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://twitter.com/i/broadcasts/1lDxLLARypRxm
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், “கடந்த 23.09.2021 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நான் தொடங்கி வைத்தேன். ஓராண்டு காலம் முடிவதற்கு முன்னால் ஒரு லட்சம் பேருக்கு மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. இந்த வேகத்துக்கு, இந்த சாதனைக்கு காரணமாக இருக்கக்கூடிய அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களுக்கும், மின்சார வாரியத் தலைவர், உயர் அதிகாரிகள், அலுவலர்கள் அனைவருக்கும், விவசாய பெருங்குடி மக்களின் சார்பில் நான் என்னுடைய நன்றியை, வாழ்த்துகளை, பாராட்டுகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு லட்சம் இணைப்பு என்கிற காரணத்தினால், 1 லட்சம் குடும்பம் அடையும் பயன் மட்டுமல்ல – அவர்களது வேளாண் உற்பத்தியால் இந்த மாநிலம் அடைய இருக்கக்கூடிய வளர்ச்சி என்ன என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே இந்தச் சாதனையையும் நாம் அளவிட முடியாத சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். 1990 வரை உழவர்கள், வேளாண்மைக்காக பயன்படுத்தும் மின்சாரத்துக்குக் கட்டணம் செலுத்தி வந்தார்கள். இப்போது இருக்கக்கூடிய புதியவர்களுக்கு இதுபற்றி தெரியாமல் இருக்கலாம் என்பதால் அதனை நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
12,09,543 வேளாண் மின் இணைப்புகள் அப்போது இருந்தது. ஒவ்வொரு உழவரிடமிருந்து 10 குதிரைத்திறன் வரை உள்ள மின் மோட்டார்களுக்கு குதிரைத்திறன் ஒன்றிற்கு 50 ரூபாய் வீதமும், 10 குதிரைத் திறனுக்கு மேல் உள்ள மின் மோட்டார்களுக்கு ஒரு குதிரைத் திறனுக்கு 75 ரூபாய் வீதமும் ஆண்டுதோறும் கணக்கிட்டு வசூலிக்கப்பட்டு வந்தது. தமிழ்நாட்டின் வேளாண் உற்பத்தியினை பெருக்கி, உழவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் கடந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு 19.11.1990 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், அனைத்து உழவர்களுக்கும் இலவச மின்சாரம் என்ற ஒரு உன்னதமான அறிவிப்பை அறிவித்தார்கள்.
இலவச மின்சாரம் என்று சொன்னால் போதுமா? அதற்குரிய இணைப்பு கொடுக்க வேண்டாமா? அதிகளவில் இணைப்புகளையும் தலைவர் கலைஞர் அவர்கள் கொடுக்கச் சொன்னார். 2001 முதல் 2006 வரை நடந்த ஆட்சியில் 1,62,479 வேளாண் மின் இணைப்புகளும், 2006 முதல் 2011 வரை நடைபெற்ற கழக ஆட்சியில் 2,09,910 வேளாண் மின் இணைப்புகளும் வழங்கப்பட்டன. அதிலும், குறிப்பாக 2010-2011 காலகட்டத்தில் கழக ஆட்சியில் அதிகபட்சமாக ஒரே ஆண்டில் 77,158 வேளாண் மின் இணைப்புகள் உழவர்களுக்கு வழங்கப்பட்டன.
அதன்பின் நடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதாவது 2011 முதல் 2021 வரை உழவர்களுக்கு வழங்கப்பட்ட வேளாண் மின் இணைப்புகள் 2,21,579 மட்டுமே. அதாவது ஆண்டுக்குச் சராசரியாக 22,100 மின் இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டன. புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் இணைப்புகள் வழங்கவில்லை . 31.03.2021 நிலவரப்படி, பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 4,52,777 வேளாண் விண்ணப்பங்கள் பதிவுசெய்து நிலுவையில் இருந்தன. இந்த குறையை தீர்க்கும் வண்ணம், உழவர்களின் நலனை எப்போதுமே முதன்மையாக கருதக்கூடிய நாம், 2021-2022-ஆம் ஆண்டில் 1,00,000 வேளாண் மின் இணைப்புகள் வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தோம். நானே தொடங்கி வைத்தேன். அன்றைய நாளே, பயனாளிகள் பத்து பேருக்கு வேளாண் மின் இணைப்புக்கான ஆணையை நான் வழங்கினேன். அன்று அடையாளமாகப் பத்து பேருக்கு வழங்கினேன்; இன்று ஒரு லட்சம் பேர் பெற்றுவிட்டார்கள். ஒரு அறிவிப்பு, இன்றைய நாள் முழுமை அடைந்துவிட்டது. இது மகத்தான சாதனை!
ஒரு திட்டத்தை தொடங்குவது சாதனை அல்ல, அந்த திட்டத்தின் பயன் முழுமையாக பயனாளிகளுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான் உண்மையான சாதனையாக அமைய முடியும். கொரோனா பெருந்தொற்று மற்றும் வடகிழக்கு பருவ மழை, இப்படிப்பட்ட இடர்பாடுகளுக்கு இடையிலும் வேளாண் மின் இணைப்பு கொடுக்கும் பணிகள் எவ்வித தொய்வும் இன்றி, செய்து முடிக்கப்பட்டுள்ளது. அதனால் தான், நம்முடைய தேர்தல் அறிக்கையிலேயே, தலைப்பு செய்தியாக என்ன சொல்கிறோம் என்றால் “சொல்வதைச் செய்வோம்! செய்வதை சொல்வோம்!”. இது கழக அரசின் அடிப்படை கொள்கையாக அமைந்திருக்கிறது. ஆறு மாத காலத்திற்குள்ளாகவே முடிக்கப்பட்டு ஒரு இலட்சம் உழவர்களுக்கும் மின் இணைப்புகள் 29.03.2022 அன்று நிறைவு செய்யப்பட்டன. * இன்று ஒரு இலட்சமாவது இலவச மின் இணைப்புக்கான உத்தரவை நான் வழங்குகிறேன்.
இதனையும் சேர்த்து தமிழ்நாட்டில் வேளாண் தொழில் செய்வோரின் எண்ணிக்கை 21.80 இலட்சத்திலிருந்து 22.80 இலட்சமாக உயர்ந்திருக்கிறது. * வழங்கப்பட்ட ஒரு இலட்சம் வேளாண் மின் இணைப்புகளினால் தமிழ்நாட்டின் வேளாண் நிலப்பரப்பு 2,13,107 ஏக்கர் அதிகரித்திருக்கிறது. * சுமார் 6,30,340 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்கள் மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டிருக்கின்றன. * இந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தியதற்கு 803 கோடி ரூபாய் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மக்களின் நலன் ஒன்றை மட்டுமே கருத்திற் கொண்டு செயல்படும் இந்த அரசு, இதுவரை இல்லாத வரலாற்று சாதனையாக ஓராண்டில் ஒரு இலட்சம் மின் இணைப்புகளை வழங்கி ஒரு பெரிய சாதனையை படைத்திருக்கிறது.
எனவே, நான் மீண்டும் மீண்டும் உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புவது, எப்பொழுதுமே உழவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய அரசு தான் இந்த அரசு, இனிவரும் காலங்களிலும் சிறப்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று உறுதியளித்து, மிகப்பெரிய சாதனையை படைத்தவர்களுக்கு வாழ்த்து கூறி கொள்கிறேன்”.
இவ்வாறு கூறினார்.