சென்னை: இந்தியாவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வரும் மாலத்தீவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க ஏப்ரல் 29ம் தேதி மாலத்தீவு செல்வதாக தகவல் வெளியான நிலையில் அச்செய்தி தவறானது என்று திமுக அறிவித்து உள்ளது. ஸ்டாலின் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் ஓய்வெடுக்க செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.
18வது மக்களவைக்கான தேர்தல் தமிழ்நாட்டில் 19ந்தேதி முடிவடைந்த நிலையில், பல மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. லோக்சபா தேர்தலையொட்டி முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று, கூட்டணி வேட்பாளர்களுக்காக ஓட்டு கேட்டார். காலையில் நடைபயிற்சி செய்யும் போதும், வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் மு.க ஸ்டாலின், ஓய்வெடுக்கும் வகையில் ஒரு வார பயணமாக, மாலத்தீவு செல்ல திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. குடும்பத்தினருடன் தனிப்பட்ட பயணமாக செல்லும் அவர், அரசு பணிகளையும் அங்கிருந்து கவனிப்பார் என்று செய்திகள் வெளியானது. இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலினின் மாலத்தீவு பயணம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
ஏற்கனவே இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. மாலத்தீவு அதிபரான முகமது முய்சு, சீனாவுக்கு சென்று வந்தபிறகு, இந்தியா மீது ஆக்ரோஷமான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறார். இந்தியா என்ற பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக இந்தியாவை தாக்குகிறார் முகமது முய்சு. இதற்கு இந்திய அரசு சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்தியா மற்றும் பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் கூறிய ஆட்சேபகரமான கருத்துகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பிரச்னை தீவிரமடைந்தது.
இதனை அடுத்து ஒரே நாளில் மாலத்தீவு ஓட்டல்களில் 7,500 முன்பதிவுகளை இந்தியர்கள் ரத்து செய்தனர். மாலத்தீவு செல்லும் விமானங்களில் 2,300 டிக்கெட்டுகளையும் இந்திய சுற்றுலா பயணிகள் ரத்து செய்தனர். அதோடு மாலத்தீவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரபல நடிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து மாலத்தீவு அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இருந்தாலும் மாலத்தீவு அதிபர், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, ”நாம் ஒரு சிறிய நாடாக இருக்கலாம், ஆனால் அது எங்களை அச்சுறுத்தும் உரிமத்தை யாருக்கும் வழங்காது” என்று கூறினார். பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவத்தினரை திரும்ப அழைத்துக்கொள்ளவும் உத்தரவிட்டது.
இதற்கிடையில், சமீபத்தில் அங்கு நடைபெற்ற அதிபர் தேர்தலில், மாலத்தீவு அதிபர் முஹமது முய்சு மீண்டும் வெற்றி பெற்றார். இந்தியாவிற்க்கு எதிரான நிலை கொண்ட இவர் கடந்த ஜனவரி 2024, சீனா சென்று வந்ததைத் தொடர்ந்து,. சீனா 1079 கோடி நிதி மாலத்தீவு வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் என சீனா அறிவித்தது. அதன்பிறகே அவரது இந்தியா மீதான கண்ணோட்டம் வேறுபட்டுள்ளது. மாலத்தீவின் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்த சலசலப்புக்கு இடையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் மாலத்தீவு செல்வதாக செய்திகள் வெளியானது சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவுக்கு சென்று குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதாக தகவல் வெளியான நிலையில், அதனை திமுக மறுத்துள்ளது. அதேநேரம் ஸ்டாலின் கொடைக்கானல் வர உள்ளார். ஏப்ரல் 29ம் தேதி இங்கு வரும் நிலையில், அவர் குடும்பத்துடன் மே 4 வரை தங்கி ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது